^மேஸ்ட்ரோ எனியோ மோரிகோன் மறைந்தார்!

entertainment

எனியோ மோரிகோன், ஆஸ்கர் விருது வென்ற உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர் இன்று மறைந்தார். இன்று அதிகாலை, ரோம் மருத்துவமனையில் 91 வயதான எனியோ மோரிகோன் காலமானார். இதை அவரது வழக்கறிஞர் ஜார்ஜியோ அசும்மா இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA இடம் உறுதிப்படுத்தினார். முன்னதாக மோரிகோன் தனது இல்லத்தில் தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் என 500க்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார் இவர். ‘The Good, the Bad and the Ugly,’ Once Upon a Time in the West, The Mission, Cinema Paradiso, Days of Heaven, The Untouchables, Malena, The Hateful Eight என உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பல படங்களில் மறக்க முடியாத இசைக்கோர்வையை வழங்கியவர் இவர். இவரது இசையமைப்பின் தாக்கம் இல்லாத திரையிசைக் கலைஞர்கள் மிகச் சொற்பமே. விசில், ஹார்மோனிகா, மணிகள், மின்சார கித்தார், சொற்களற்ற குரல் என பல பரீட்சார்த்த முயற்சிகளை மிக எளிமையான முறையின் வெகுஜனத்திடம் கடத்தியவர் இவர். திரை இசையில் இவர் அடைந்த ஒலி பெரும்பாலும் தனித்துவமானது மற்றும் புதுமையானது.

குறிப்பாக இயக்குநர் செர்ஜியோ லியோனியின் A Fistful of Dollars, For a Few Dollars More , The Good, the Bad and the Ugly, Once Upon a Time in the West ஆகிய படங்களுக்கு இவர் அமைத்த இசை உலகப்புகழ் பெற்றவை. ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என அழைக்கப்படும் இப்படங்களுக்கு எனியோ மோரிகோன் அமைத்த இசையமைப்பு, இதற்கு முன் எப்போதும் இசை இவ்வாறு இருந்ததேயில்லை என்பது போல கலை அமைதியுடன் இசைந்து கொண்டிருக்கும் ஆற்றல் கொண்டவை.

குயின்டின் டரான்டினோவின் ‘The Hateful Eight’ என்ற படத்துக்காக மோரிகோன் ஆஸ்கர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோரிகோனின் மரணம் உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே தனது டிவிட்டர் பதிவில், எல்லையற்ற நன்றியுணர்வோடு, மேஸ்ட்ரோ எனியோ மோரிகோனின் கலை மேதமையை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். இசை மற்றும் சினிமா வரலாற்றில் அழியாமல் இருக்கும் பல மறக்கமுடியாத இசைக்குறிப்புகளின் மூலம் எங்களுக்கு கனவு, உற்சாகம், பிரதிபலிப்பு ஆகியவற்றை அளித்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், “எனியோ மோரிகோன் போன்ற ஒரு இசையமைப்பாளரால் மட்டுமே இத்தாலியின் அழகு, கலாச்சாரம் மற்றும் நீடித்த காதல் ஆகியவற்றை மெய்நிகருக்கு முந்தைய யதார்த்தத்திலும், இணையத்திற்கு முந்தைய காலத்திலும் உங்கள் உணர்வுகளுக்கு கொண்டு வர முடியும். நாங்கள் செய்யக்கூடியது ஆசானின் வேலையைக் கொண்டாடுவதும் கற்றுக்கொள்வதும் மட்டுமே!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சிம்பு தேவன் தனது டிவிட்டர் பக்கத்தில், ”இளையராஜா சாருக்கு பின் நான் மிக நேசித்த இசைமேதை எனியோ மோரிகோன். அவர் தனது 91 வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டார். Cowboy இசையை நமக்கு அளித்தவர். எனது ‘இரும்புக்கோட்டை’ படத்தில் அவரது பாதிப்பு இருக்கும். 1961 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘The Hateful Eight’ படம் வரையிலான அவரது பயணம் மறக்கமுடியாதது. ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

எனியோ மோரிகோன் இசையமைப்பில் வந்த சில முக்கியமான படங்களின் இசை இணைப்புகள்:

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *