மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

ஓடிடியில் நேரடி ரிலீஸாகும் லாரன்ஸின் ‘லட்சுமி பாம்’!

ஓடிடியில் நேரடி ரிலீஸாகும் லாரன்ஸின் ‘லட்சுமி பாம்’!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமி பாம்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடிவைக்கப்பட்டுள்ளன. திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஏராளமான திரைப்படங்களின் ஷூட்டிங் பாதியில் நிற்கிறது. அதே போன்று முழுமையடைந்த திரைப்படங்களையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிலர் திரைப்படங்களை டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. பிற மொழிகளிலும் முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் டிஜிட்டல் தளங்களில் ரிலீஸாகி வருகிறது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘லட்சுமி பாம்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கைரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 30 ஜுன் 2020