மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

அஜித் வழியில் ரஜினி?

அஜித் வழியில் ரஜினி?

கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ரஜினியின் 'அண்ணாத்த' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தர்பார் படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர். கிராமத்தை களமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படம் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, ஆரம்பத்தில் தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட ரஜினியின் அண்ணாத்த, பின்னர் பொங்கல் 2021 வெளியீட்டிற்கு தள்ளப்பட்டது. தற்போதுள்ள சூழலில், படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போடப்படும் என்பதால் பொங்கல் 2021 இல் அண்ணாத்த படம் வெளியாவது சந்தேகமே என செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில், சிவா இயக்கி வந்த அண்ணாத்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்தாண்டு தான் மீண்டும் துவங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் படக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக படத்தின் படப்பிடிப்பை தள்ளிப்போடும் முடிவுக்கு படக்குழு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை, தீவிரமான தொற்று பரவல் என தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் தான், ரஜினிகாந்த் பாதுகாப்பு காரணங்களுக்காக படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்குமாறு படத்தின் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயம், அஜித்தும் தனது தயாரிப்பாளர் போனி கபூரிடம் இதே போன்ற முடிவை முன்னரே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹெச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பும் பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளிப் போடப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதிப் படப்பிடிப்பு காட்சிகள் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால், வலிமை படப்பிடிப்பும் அடுத்தாண்டே துவங்கப்படும் என கூறப்படுகிறது.

-முகேஷ் சுப்ரமணியம்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon