மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

அமீர் கான் வீட்டில் கொரோனா பாதிப்பு!

அமீர் கான் வீட்டில் கொரோனா பாதிப்பு!

தனது வீட்டில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்புகள் எதிர்பாராதவிதமாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16, 919 ஆக உயர்ந்துள்ளது. ஏழை, பணக்காரன் என்ற எவ்வித வேறுபாடும் இல்லாமல் ஏராளமான மக்கள் வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் அமீர் கான் தனது வீட்டிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது ஊழியர்களில் சிலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களிடம் நான் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அவர்களை மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களை சிறந்த முறையில் கவனித்துக் கொண்டதற்காகவும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தூய்மைப்படுத்துவதற்காகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வீட்டில் அவர்களைத் தவிர்த்த மற்ற அனைவருக்கும் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இப்போது, என்னுடைய அம்மாவுக்குப் பரிசோதனை நடக்கவிருக்கிறது. அவருக்கும் தொற்று இருக்கக் கூடாது என்று தயவுசெய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை எங்களுக்கு விரைவாகவும் அக்கறையுடனும் உதவிய மும்பை மாநகராட்சிக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

கோகிலாபென் மருத்துவமனைக்கும், அங்கு பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். பரிசோதனை நேரத்தில் மிகவும் கனிவுடனும், ஈடுபாட்டுடனும் நடந்து கொண்டனர். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், பாதுகாப்பாய் இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon