மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வனிதா-பீட்டர் பால் திருமணம்: சண்டையும், சர்ச்சையும்!

வனிதா-பீட்டர் பால் திருமணம்: சண்டையும், சர்ச்சையும்!

நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை (ஜூன் 27) திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில் அது குறித்த விவாதங்கள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.

நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியரின் மகளான வனிதா விஜயகுமார், 1995ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2000ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை தனது19 வயதில் திருமணம் செய்து கொண்ட வனிதா அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007இல் விவாகரத்து பெற்றுக்கொண்டார். அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை வனிதா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா, ஜெயந்திகா என்கிற மகள்களும் இருக்கின்றனர். தனது இரண்டு மகள்களுடன் வனிதா வசித்து வருகிறார். மகன் விஜய் ஸ்ரீஹரி, அவரது தந்தை ஆகாஷுடன் வசிக்கிறார்.

தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதல், மகனை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்று வனிதா தொடர்ந்து ஊடக சர்ச்சைகளுக்குள் சிக்கி வந்தார். தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களை மட்டும் எதிர்கொண்டு வந்த வனிதாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியும், குக் வித் கோமாளியும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றையும் வனிதா ஆரம்பித்தார்.

மூன்றாவது திருமணம்

இந்த நிலையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பால் என்பவரை தான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வனிதா அறிவித்தார். இவர்களது திருமணம் வனிதாவின் வீட்டில் ஜுன் 27 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

பலரும் வனிதாவை விமர்சித்து வந்தாலும், சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் பெருகியது. இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் இந்தத் திருமணம் தொடர்பாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளாமலேயே வனிதாவை அவர் திருமணம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் விவகாரம் சர்ச்சைகளை மேலும் பெரிதாக்கி விட்டது. முதலில் ஆதரவு தெரிவித்தவர்கள் கூட வனிதாவுக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில், “இப்போது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து பெற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும் போது படிப்பும், புகழும், தைரியமும் உள்ள ஒரு பெண் எவ்வாறு இந்த தவறை செய்திருப்பார் என யோசித்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை அவரது முதல் மனைவி ஏன் அமைதியாகவே இருந்தார். இந்தத் திருமணத்தை அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “வனிதா இக்கட்டான பல சூழல்களை எதிர்கொண்டவர். அவற்றையெல்லாம் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த உறவேனும் அவருக்கு நல்லவிதமாக அமையும் என்று நினைத்தேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதைத் தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த சிக்கலை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது.” என்று கூறியிருந்தார்.

இது டிவி ஷோ அல்ல

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுகளுக்கு பதில் அளித்த வனிதா “உங்கள் அக்கறைக்கு நன்றி. தம்பதிகளாக இருக்கும் இருவர் ஏன் பிரிந்து சென்றார்கள் என்றோ விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தில் எந்த விதத்திலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் உங்களுடைய எந்த தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடவில்லை. எனவே நீங்களும் உங்கள் தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம். இது உங்களுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், ‘ஒருவருடைய தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் சர்ச்சை செய்ய நீங்கள் சட்ட வல்லுநரோ அல்லது அதற்கான தகுதி பெற்ற நபரோ அல்ல. அத்துடன் இந்த புகாரை அளித்திருக்கும் பெண்ணுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக அவர் யாருடன் வாழ்ந்து வருகிறாரோ அவர்கள் இந்த பிரச்னையைப் பார்த்துக் கொள்வார்கள். தேவையற்ற விஷயங்களில் உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்’ என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், ‘வனிதா-பீட்டர் பால் திருமண விவகாரம் குறித்து விவாதம் செய்வதை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். இந்த திருமணம் குறித்த என்னுடைய கருத்தை நான் தெரிவித்தேன் அவ்வளவு தான். இதைவிட முக்கிய விஷயங்களான பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தந்தை மகன் மரணம் ஆகியவற்றுக்கு குரல் கொடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

அதே நிலையில், தனது கணவரைத் தனக்கு மீட்டுத் தரவேண்டும் என்று கேட்டு பீட்டர் பாலின் முதல் மனைவி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon