மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

மீண்டும் ஒரு சான்ஸ்: கெளதம் மேனனின் மியூசிக் ட்ரீட்!

மீண்டும் ஒரு சான்ஸ்: கெளதம் மேனனின் மியூசிக் ட்ரீட்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஒரு சான்ஸ் குடு’பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் நிலையிலும் திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களும் தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து தனது படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியானது. சிம்பு-த்ரிஷா நடித்து வெளியான அந்த குறும்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற அந்த குறும்படத்தைத் தொடர்ந்து ‘ஒரு சான்ஸ் குடு’என்னும் சுயாதீன பாடல் வீடியோவை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையில் பாடல் வீடியோவில் நடித்துள்ள சாந்தனு, மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து கொண்டே நடித்துக் கொடுத்துள்ளனர்.

தனது காதலர் சாந்தனு தன்னிடம் கூறாமல் ஒரு திரைப்படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்ததாக மேகா ஆகாஷ் அவருடன் சண்டை போடுகிறார். கோபத்தில் அவரது ஃபோன் நம்பரையும் ப்ளாக் செய்துவிடுகிறார். மனம் வருந்திய சாந்தனு தனது நண்பன் கலையரசனிடம் இது குறித்து கூறி மனம் வருந்துகிறார். கலை, மேகா ஆகாஷிடம் தனது நண்பனைப் பற்றி பாடல் பாடி சமாதானம் செய்ய முயற்சிப்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

காதலையும், நட்பையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தபாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்க்கி வரிகள் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon