மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

அப்பாவை பற்றி நான் மோசமாக பேசவில்லை: மதன் கார்க்கி

அப்பாவை பற்றி நான் மோசமாக பேசவில்லை: மதன் கார்க்கி

பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சமீபத்தில் ஒரு ஆன்லைன் இதழில் ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்ததிலிருந்து சமூக ஊடகங்களில் அது விவாதமாகி வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து உரத்துப் பேசிய 'மீ டூ' இயக்கம், பல முன்னணி திரைப்பிரபலங்களின் வெளிவராத முகத்தை காட்டியது. இந்த 'மீ டூ' இயக்கம் கொதி நிலையில் இருந்த சமயம், வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாடகி சின்மயி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்திரையுலகில் இந்த விவகாரம் அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்திய #MeToo என்ற பிரபலமான ஹேஷ்டேக் கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் பிரபலமடையத் தொடங்கியது. இதில் 'சன்ஸ்கிரீன் இந்தியா' என்ற ஆன்லைன் இதழில் வெளியான வைரமுத்து பற்றிய கட்டுரை முக்கிய பங்கு வகித்தது.

சின்மயி தைரியமாக போராடியது, வைரமுத்து மீதான புகாருக்கு பின் தமிழ்திரையுலகில் சின்மயி ஒதுக்கப்பட்டது, சின்மயி மட்டுமில்லாமல் வைரமுத்து மீது புகாரளித்த பலரது குரல்களையும் இந்த கட்டுரை வெளிக்கொண்டு வந்தது. வைரமுத்துவை தனிமைப்படுத்தாத கோலிவுட் துறையின் மீது பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தினர். இதனிடையே, பாடலாசிரியரின் மகன் மதன் கார்க்கி, தனது தந்தைக்கு எதிராக பேசியதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பாடலாசிரியரான மதன் கார்க்கி தனது டிவிட்டர் பக்கத்தில் இதை மறுத்துள்ளார்.

மதன் கார்க்கி வெளியிட்ட பதிவில்,“ஒரு சமீபத்திய கட்டுரை எனது தந்தையைப் பற்றி நான் ஒரு நபரிடம் மோசமாகப் பேசியதாக மேற்கோள் காட்டுகிறது. அது உண்மை இல்லை. எந்த மகனும் அதைச் செய்ய மாட்டான். என்னை அறிந்த மற்றும் என்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு நான் எந்த நேரத்திலும் யாரையும் பற்றி மோசமாக பேசியதில்லை என்பதை அறிவார்கள்” என பதிவிட்டுள்ளார்.

கட்டுரை வெளிவந்த பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து வெகுசிலர் மட்டுமே சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தனர். இயக்குநர் சி.எஸ்.அமுதனும் நடிகை தாப்ஸியும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தனர். தாப்ஸி இந்தக் கட்டுரைக்கு டிவீட் மூலம், "திறமை ஒரு பரிசு, ஆனால் குணம் என்பது ஒரு தேர்வு"என பதிலளித்தார்.

-முகேஷ் சுப்ரமணியம்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon