மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

விஜய்-அஜித்: அதிக சம்பளம் யாருக்கு?

விஜய்-அஜித்: அதிக சம்பளம் யாருக்கு?

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க 50 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்ற முதல் நடிகர் ரஜினிகாந்த்.

இதற்காக அவர் 25 வருடங்களுக்கும் மேலாக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தொடக்க காலங்களில் வருடத்திற்கு 3 முதல் 7 படங்கள் வரை அவர் நடித்தார்.

இன்றைய இளம் நடிகர்களாகக் கூறப்படும் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து முடிக்கின்றனர். வருடத்தில் 3 படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் வாங்கி விடுகின்றனர்.

ரஜினியை காட்டிலும் வசூல், பார்வையாளர் எண்ணிக்கை அதிகமுள்ள விஜய் அவரை விடவும் அதிகமான சம்பளம் பெற தங்கள் உறவினர்கள் மூலம் 'மாஸ்டர்' படத்தை தயாரித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு 75 கோடி சம்பளம் என்பதை அறிந்த அஜித்குமார், தான் நடிக்கும் புதிய படத்திற்கு 80 கோடி சம்பளமாகக் கேட்டுள்ளார்.

அஜித் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா சிக்கல் காரணமாகத் தடைபட்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அஜித் நடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

அந்தப்படத்தை இயக்க விஷ்ணுவர்த்தனைப் பரிந்துரைத்திருக்கிறாராம் அஜித். மேலும், அந்தப் படத்துக்கு சம்பளமாக எண்பது கோடி கேட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.

வலிமை படத்தில் அஜித்தின் சம்பளம் நாற்பது கோடி என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்த படத்துக்கு நாற்பது கோடி ரூபாய் அதிகமாகக் கேட்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்னும் இது தொடர்பான பேச்சுகள் இறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

சம்பள விஷயத்தில் அஜித் இறங்கி வந்தால் தான் அடுத்த படம் உறுதியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

-இராமானுஜம்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon