மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

எனது சேவையே குழந்தைகளைக் காப்பாற்றியது: லாரன்ஸ்

எனது சேவையே குழந்தைகளைக் காப்பாற்றியது: லாரன்ஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காப்பகக் குழந்தைகள் குணமடைந்து விட்டதாக நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் நடிகர் லாரன்ஸ் நடத்திவரும் காப்பகத்தில் வசித்துவரும் 18 குழந்தைகள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடந்த மே 28 அன்று லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக மின்னம்பலத்தில் லாரன்ஸின் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா!என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் குணமடைந்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் "நண்பர்களே, ரசிகர்களே, உங்களுடன் ஒரு நல்ல செய்தியை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த எனது அறக்கட்டளையின் குழந்தைகளுக்குப் பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாகக் காப்பகம் திரும்பியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மேலும், உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் ஆகியோருக்கும் தன்னலமற்ற சேவை புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் லாரன்ஸ் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, "நான் நம்பியது போன்றே, எனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள்" என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon