மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

3 சந்தானம் + யோகி பாபு: டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர்!

3 சந்தானம் + யோகி பாபு: டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர்!

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து முழுநேர கதாநாயகனாக வளர்ந்தவர் நடிகர் சந்தானம். சிவாஜிகணேசன், கமல்ஹாசன், விஜய் ஆகியோருக்கு இணையாக ஒரு திரைப்படத்தில் இரண்டிற்கு மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார். அவ்வாறு சந்தானம் ஒரே நேரத்தில் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம் ‘டிக்கிலோனா’.

கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம்(மே 27) வெளியிடப்பட்டது. மூன்று விதமான வேடங்களில் சந்தானம் இருப்பது போன்ற அந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று(மே 28) படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. உடை எதுவும் இல்லாமல் இரண்டு பாத்திரங்களை மட்டும் கொண்டு உடலை மறைத்து வைத்திருப்பதாக அந்த போஸ்டர் இருந்தது. இந்தப் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன் விவாதப் பொருளாகவும் மாறியது. இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று(மே 29) மாலை 5 மணிக்கு ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சந்தானத்துடன் நடிகர் யோகி பாபுவும் உள்ளார்.

போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், ‘மூன்று சந்தானம் = அதிகம் trouble. மூன்று சந்தானம் + யோகி பாபு = சொல்லவே வேணாம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானத்துடன் யோகிபாவும் இணைந்துள்ளார் என்ற தகவல் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. டிக்கிலோனா திரைப்படத்தில் அனகா, ஷிரின் காஞ்சன்வாலா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

முனீஸ்காந்த், ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, நிழல்கள் ரவி, பிரசாந்த், அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கக் காத்திருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். சினிஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon