மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

விமர்சனம்: பொன்மகள் வந்தாள்!

விமர்சனம்: பொன்மகள் வந்தாள்!

பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் கடந்து ஜோதிகா கதாநாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேற்றிரவு அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது.

கொடும் கொலைகாரி என்ற பட்டத்துடன் மரணமடைந்த பெண்ணிற்கு நீதி தேடி, ஒரு பெண் வழக்கறிஞர் நடத்தும் சட்டப் போராட்டமே ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம்.

2004 ஆம் ஆண்டு ஊட்டியில் ஜோதி என்பவர் பத்து வயது பெண் குழந்தையைத் துப்பாக்கி முனையில் கடத்தியதாகவும், குழந்தையைக் காப்பாற்றப் போன இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படுகிறது. வட நாட்டுப் பெண்ணான அவரை போலீசார் கைது செய்ய முற்படும் போது, அவர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றி பதிலுக்கு போலீசார் சுட அதில் குற்றவாளி மரணமடைந்துவிட்டார் என தெரிவிக்கின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்குத் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ கொலைகாரியான ஜோதி ஏராளமான குழந்தைகளைக் கொன்று குவித்திருப்பதாக விசாரணையில் கூறப்படுகிறது. அனைவரையும் உலுக்கிய இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் ஜோதி குற்றவாளி இல்லை என்று குறிப்பிட்டு, இதே வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. பொது நல வழக்குகளைத் தொடுத்து வரும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) ஜோதி வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார். அவருக்கு உதவியாக வழக்கறிஞரான அவரது மகள் வெண்பா(ஜோதிகா) வழக்கை கையில் எடுக்கிறார். பிஞ்சு குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு சைக்கோவிற்கு ஆதரவாக வாதாடுவதா? என்று பொதுமக்கள் வெண்பாவை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர் மீது மண்ணைத் தூவி, செருப்பை வீசி அவமானப்படுத்துகின்றனர். வெண்பா வாதாடும் முதல் வழக்கு என்பதால் அவர் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை கையில் எடுத்திருப்பதாக விமர்சனங்களை எதிர்கொள்கிறார். எனினும் வெண்பா, ஜோதிக்கு நீதி தேடித்தர தளராமல் போராடுகிறார். ஏராளமான அவமானங்களையும், கேலிகளையும் கடந்து வெண்பா எதற்காகப் போராடுகிறார்? ஜோதியின் உண்மைப் பின்னணி என்ன? அவருக்கு நீதி கிடைத்ததா? என்பது தான் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் மீதிக்கதை.

ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படைப்பாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது. அத்தனை உணர்வுகளையும் திறம்பட வெளிக்காட்டி நடித்துள்ளார். ஜோதிகா மட்டுமின்றி எதிர்தரப்பு வழக்கறிஞராக வரும் பார்த்திபன், பெட்டிஷன் பெத்துராஜாக வரும் பாக்யராஜ், பிராதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கான சிறந்த தேர்வு.

ஆனால், மிகவும் சென்சிட்டிவான வழக்கைக் கையாளும் வழக்கறிஞராக, உரிய சாட்சியங்களை முன்வைக்காமல், உணர்வுப்பூர்வமான வசனங்களை மட்டுமே பேசி நீதியை நிலைநாட்ட வெண்பா முயற்சிக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் போதும் உரிய சட்டப்பிரிவுகளையோ, இணையான வழக்குகளில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையோ குறிப்பிடாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் கருணையைத் தேடுகிறார். வழக்கறிஞராக வரும் பார்த்திபன் ஒரு காட்சியில் தனது ஜூனியரிடம், ‘நீ எல்லாம் சினிமாவில கோர்ட்ட பாத்திட்டு வக்கீலா வந்திட்ட’என்று கூறுவார். அவர் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தையும் சேர்த்து தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்பது அதற்குப் பின்னரான காட்சிகள் தெளிவாக உணரத்துகின்றன.

உண்மையை நிலைநாட்டுவதற்கான சட்ட போராட்டமாக இல்லாமல், சட்டத்திற்கும், நீதிக்கும் இடையே நடக்கும் போராட்டமாக ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. படம் முழுவதும் ஏராளமான கேள்விகளும், குழப்பங்களும் பார்வையாளர்களுக்கு எழுகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே, தியாகராஜனுக்கு குழந்தைகள் கொலை செய்யப்பட்டதில் தொடர்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. விறுவிறுப்பான கதைக்கு வேகம் கூட்டாத திரைக்கதையும், இடைவேளைக்கு முன்னதாகவே கணிக்க முடிந்த இறுதிக் காட்சியும் படத்தின் மிகக்பெரிய பலவீனம்.

ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என்று வலிமை வாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் உருவான திரைப்படம் என்பதால் வழக்கத்திற்கு மாறான அதிக எதிர்பார்ப்பு ‘பொன்மகள் வந்தாள்’திரைப்படத்தின் மீது இருந்தது. மேலும் OTT தளத்தில் படம் நேரடியாக வெளியாகிறது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும், விவாதங்களும் திரைப்படத்தை மேலும் பிரபலப் படுத்தியது. எந்த அளவிற்கு வலிமையான விளம்பரம் படத்திற்குக் கிடைத்ததோ, அதே அளவிற்கு வலிமையான விமர்சனங்களுக்கும் தற்போது படம் ஆளாகியுள்ளது.

படத்தில் சட்டத்தையும், சாட்சியங்களையும் மறந்து நியாயத்தை மட்டும் நீதிபதி பார்த்தது போன்று, பார்வையாளர்களும் லாஜிக்கையும், எதார்த்தத்தையும் மறந்து மையக் கருத்தை மட்டும் ஆராய்ந்தால் படத்தைப் பாராட்டலாம். ஜோதிகாவின் எதார்த்தமான நடிப்பும், நீளமான வசனங்களை நிதானமாகப் பேசும் அழகும் ரசிக்க வைக்கிறது. ‘பசிக்காக ஒரு கை அரிசியைத் திருடுனவனை அடிச்சுக் கொன்ன இதே நாட்டில தான் 100 பேரை பலாத்காரம் பண்ணவங்க, அதை வீடியோ எடுத்தவங்க எல்லாம் ஜாலியா வெளியே சுத்திக்கிட்டு இருக்காங்க’,‘நாங்க தோத்துட்டோம்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை யுவர் ஹானர். ஜஸ்டிஸ்’, ‘அவமானம்னு நாம மறைக்குற சின்ன உண்மையால கூட எத்தனையோ கெட்டவங்க நல்லவங்க ஆயிடுறாங்க’ போன்ற வசனங்கள் பாராட்ட வைக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுணர்வு குறித்து பேச முயன்றதற்காகப் படக்குழுவிற்குப் பாரட்டுக்கள். ஆனால் அந்த முயற்சியில் முழு ஈடுபாடு செலுத்தியிருக்கலாம். வெறும் வசனங்களில் மட்டுமே அந்தப் போராட்டம் இருக்கிறது. வீரியமான கதைக்களம், திறமையான நடிகர்களுடன் விறுவிறுப்பான பயணமாக அமைய வேண்டிய ‘பொன்மகள் வந்தாள்’ திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வினால் வேகம் இழந்து விட்டது. பல இடங்களிலும் ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்னும் உணர்வு மறைந்து விடுகிறது.

ஜோதிக்கு நீதி கிடைத்தது போன்று, பொன்மகளுக்கும் உரிய நீதி கிடைத்திருக்கலாம்.

தயாரிப்பு: 2டி எண்டர்டெயின்மென்ட்

இயக்கம்: ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்

இசை: கோவிந்த வசந்தா

ஒளிப்பதிவு: ராம்ஜி

படத்தொகுப்பு: ரூபன்

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon