ஆதரவற்ற குழந்தைகளுக்காக லாரன்ஸ் நடத்திவரும் காப்பகத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகரில் நடிகர் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அங்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வரும் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இது தொடர்பாக நடிகர் லாரன்ஸ் நேற்று (மே 28) தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல்நிலை குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர்,“நான் செய்து வரும் சேவைகள் என் குழந்தைகளைக் காக்கும் என்று நான் நம்புகிறேன். அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு எனது நன்றிகள். நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்காக நான் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வாரம் முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தெரிந்தது. தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 18 குழந்தைகள் 3 ஊழியர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.
ஆனால் மருத்துவர்களிடம் பேசிய போது குழந்தைகளின் உடல் நலத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர்கள் நலமாக இருப்பதாகக் கூறினார்கள். அவர்களுக்கு காய்ச்சல் குறைந்து வெப்பநிலையும் சீராகியுள்ளது. கொரோனா நெகட்டிவ் என்று வந்ததும் அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த சூழலில் உடனடியாக உதவி செய்த எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு எனது நன்றிகள்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ. ரவி அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகளை கூறிக் கொள்கிறேன். நாம் செய்யும் சேவை என் குழந்தைகளை காக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா