மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

அதிர்ச்சியில் அமேசான் பிரைம்!

அதிர்ச்சியில் அமேசான் பிரைம்!வெற்றிநடை போடும் தமிழகம்

ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையதளத்தில் வெளியானது.இந்த படம் இன்று(மே 29 ஆம் தேதி) அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே படம் வெளியாகி விட்டது. படத்தை வெளியிடவிருந்த அதிகாரப்பூர்வ தளமான அமேசானில் வெளிவருவதற்கு முன்பே சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகி விட்டது தான் அதற்குக் காரணம் என்கின்றனர்.

இதனால் அதிர்ந்து போன அமேசான் நிறுவனம், அவசர அவசரமாக திட்டமிட்டதை விட முன்கூட்டியே படத்தை வெளியிட்டார்களாம். இந்த நிகழ்வால் திரையுலகம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது மட்டுல்லாது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

திரைப்படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமை கொடுப்பதன் மூலம் தான் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாகின்றன என்று குற்றசாட்டு கூறப்பட்டது. தமிழகத்துக்குள்ளேயே திரையரங்குகளில் படத்தை எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

திரைப்படங்களை டிஜிட்டல் வடிவில் திரையரங்குகளுக்கு கொண்டு செல்லும் UFO, கியூப் நிறுவனங்கள் வீடியோ பைரசி உருவாக உடந்தையாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்தப்படம் மேற்சொன்ன இடங்களில் வெளியாகாத நிலையில், அமேசானில் ஒளிபரப்பபடுவதற்கு முன்பாக திரையுலக பிரபலங்கள் அவரவர் வீடுகளில் படத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது அந்நிறுவனம்.

அப்படி படம் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்கள் நேற்று காலை முதல் படம் பற்றிய தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். முன்பெல்லாம் புதிய படங்கள் வெளியான பின்பு தமிழ்ராக்கர்ஸில் சட்டவிரோதமாக வெளிவரும். தற்போது வெளிவருவதற்கு முன்பாகவே தமிழ்ராக்கர்ஸ் சட்டவிரோதமாக படத்தை வெளியிட்டுள்ளது.

தயாரிப்பாளரிடம் இருந்து நேரடியாக அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படம் எப்படி திருடு போனது? முதல் நாள் அவரவர் இருப்பிடங்களில் இருந்து பொன்மகள் வந்தாள் படம் பார்த்த திரையுலக பிரபலங்கள் மூலமாகவா? அமேசான் நிறுவனத்திற்குள் தமிழ்ராக்கர்ஸ் ஊடுருவி படத்தை களவாடி சென்று ஒளிபரப்பினார்களா? எங்கிருந்து போனது? என்கிற விவாதம் தமிழ் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

-இராமானுஜம்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon