pகொரோனாவுக்கு பிந்தைய சினிமா: வெற்றிமாறன்

entertainment

கொரோனாவுக்கு பின் சினிமாவின் ‘உடனடி’ எதிர்காலம் என்னவாக இருக்கும் என வெற்றிமாறன் தன் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

ஃபிலிம் கம்பேனியன் என்ற சினிமா குறித்த சேனல் சார்பில் பாசு சங்கர், சில நாட்களுக்கு முன் ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ மூலம் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலை நடத்தினார். இதில் வெற்றிமாறன் தனது படங்கள் குறித்தும், தனக்கு பிடித்த கலைஞர்கள் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த கலந்துரையாடலில், தினேஷ் கார்த்திக் கொரோனாவுக்கு பின் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்குமென ஒரு இயக்குநராக உங்கள் பார்வை குறித்து அறிய விரும்புகிறேன்” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “உடனடி எதிர்காலம் எப்படியிருக்குமெனில், குறைவான எண்ணிக்கையில் நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை, பட்ஜெட்டை வைத்துப் படங்களை எடுக்க ஆரம்பிப்போம். பெரும்பாலும் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் ‘ஃபேமிலி டிராமாக்கள்’ இருக்கும். ஏனெனில் நாம் முன் போல நூறு முதல் ஆயிரக்கணக்கான நபர்களை வைத்துக்கொண்டு இனி படமாக்க முடியாது. சமூக இடைவெளி சினிமா படப்பிடிப்பில் சாத்தியமில்லை. ஒளிப்பதிவாளருக்குப் பக்கத்தில் ஃபோகஸ் புல்லர் இருந்துதான் ஆக வேண்டும். நடிகர் மற்றும் நடிகையர்; அல்லது இரண்டு நடிகர்கள்; அல்லது இரண்டு நடிகையர்; அவர்களுக்குள் இருக்கும் ஒரு நெருக்கமான தருணத்தை காட்சிப்படுத்த முயற்சிக்கும்போது உங்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

முதலில் 3 அடியாக இருந்த சமூக இடைவெளி தற்போது 6 அடியாக இருக்கிறது. இது மிகவும் சிக்கலானது. அதே நேரம் திரையரங்குகளும் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளும். 1000 பேர் உட்காரக் கூடிய திரையரங்கில் இனி 250 பேர் தான் உட்கார முடியும். சமூக விலகல் காரணமாக இரண்டு பேருக்கு நடுவில் ஒரு இருக்கை காலியாக இருக்க வேண்டும். இரண்டு வரிசைகளுக்கு நடுவில் ஒரு வரிசை காலியாக இருக்க வேண்டும். அப்படித்தான் திரையரங்குகள் இயங்க ஆரம்பிக்க வேண்டும். திரையரங்குக்கு வர நகரங்களில் மக்களிடையே பயம் இருக்கும். டவுன், கிராமங்களில் அவ்வளவு பயப்படமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த கொரோனா, திரைப்படத்துறைக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது” என்றார்.

அப்போது பாசு சங்கர், “அதிக அளவில் பட்ஜெட்டும் அடிபடும் அல்லவா? குறிப்பாக நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற OTT தளங்களின் வருகையால் திரையரங்க வெளியீடுகள் குறைந்து விடும் வாய்ப்புள்ளது போலவும் தோன்றுகிறது” என்றார். அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “ஆம். அதுதான் நடக்கப்போகிறது” என்றார்.

தினேஷ் கார்த்திக், “அப்படியெனில் இந்த சூப்பர் ஹீரோ இமேஜ், மாஸான முதல் பாடல் போன்றவை வழக்கொழிந்துவிடுமே” என்றார். வெற்றிமாறன், “அதெல்லாம் இன்னும் அதிகமாகத்தான் ஆகும். உதாரணத்திற்கு ஹாலிவுட் படங்களை எடுத்துக்கொள்வோம். தற்போது அவர்கள் சூப்பர் ஹீரோ படங்களை மட்டும் தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு காரணங்கள்: எடுத்துக்காட்டாக, ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் 10ஆவது பாகம் வரவிருக்கிறது. ஏற்கனவே 9 பாகங்கள் எடுத்துள்ளதால், படத்தின் தலைப்பே பெரிய விளம்பரம். எனவே, விளம்பரத்திற்காக, அவர்கள் பட்ஜெட்டில் தனியாக ஒதுக்கவேண்டிய தேவையில்லை. இரண்டாவது, சூப்பர் ஹீரோ படங்களில் பெரும் சாகசம் இருக்கிறது. இந்திய திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்களின் இடத்தை சூப்பர் ஸ்டார்கள் பிடித்திருக்கிறார்கள். அதுதான் இங்கே அறிமுகப்பாடலாகவும், ஐம்பது பேரை, நூறு பேரை அடிப்பதாகவும் இருக்கிறது. சூப்பர் ஹீரோக்களின் பிராந்திய வடிவம் தான் சூப்பர் ஸ்டார்கள். அதனால் அது இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

* நன்றி: ஃபிலிம் கம்பேனியன்(https://baradwajrangan.wordpress.com/2020/05/20/interview-vetri-maaran-by-dinesh-karthik-and-basu-shanker/)*

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *