மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

'நிசப்தம்' சர்ச்சை: தயாரிப்பாளர் வைத்த முற்றுப்புள்ளி!

'நிசப்தம்' சர்ச்சை: தயாரிப்பாளர் வைத்த முற்றுப்புள்ளி!

நிசப்தம் வெளியீடு தொடர்பாக உலவிய வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவிருக்கும் படம் நிசப்தம். இந்த படத்தில் கதாநாயகனாக மாதவன் நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் வில்லனாக ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் நடித்திருக்கிறார்கள். ரெண்டு படத்திற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து நிசப்தம் மூலமாக அனுஷ்கா மாதவனுடன் இணைந்துள்ளார். இசைக் கலைஞரான மாதவனின் மனைவியாக சாக்‌ஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச இயலாத ஓவியராக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லரும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள நிசப்தம், கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. திரில்லர் படமான நிசப்தம், ஆன்லைன் தளங்களில் வெளியாகவுள்ளதாகவும் அனுஷ்காவுக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதற்கு முன்பு செய்திகள் வெளியானதையடுத்து, தயாரிப்பாளர் தரப்பு அதற்கு விளக்கம் அளித்தது.

அத்துடன், 'நிசப்தம்' திரையரங்கில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதனிடையே தொடர்ச்சியாக இந்தப் படம் தொடர்பான வதந்திகள் உலவிக் கொண்டே இருந்த நிலையில் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தனது சமூக வலைதள பக்கத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பதிவிட்டுள்ளார்.

கோனா வெங்கட் கூறும் போது, "’நிசப்தம்’ வெளியீடு குறித்து ஊடகங்களில் நிறைய யூகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியிடுவதற்குத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், அப்போது OTT தளத்தை வெளியிடுவதற்கான மாற்றாகப் பார்ப்போம். நல்லது நடக்கும் என நம்புவோம்" என தெரிவித்துள்ளார்.

இப்படத்தை ஹேமந்த் மதூர்கர் இயக்கியிருக்கிறார்.

-முகேஷ் சுப்ரமணியம்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon