மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

நடிகையாகக் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ் தங்கை!

நடிகையாகக் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ் தங்கை!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'க/பெ. ரணசிங்கம்'. நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் நேற்று(மே 23) வெளியானது. தண்ணீர் பிரச்னை, நில உரிமை என சமூக கருத்துக்களை முன்வைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விருமாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிகையாக அறிமுகமாகிறார். நேற்று வெளியான டீசரில் அவர் நடித்துள்ள சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த இந்நிலையில் தமிழ் சினிமாவில் களம் இறங்கும் பவானிக்கு ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவியும் பாடகியுமான சைந்தவி ஆகிய இருவரும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், "க/பெ. ரணசிங்கம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். முதல் திரைப்படத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீக்கு பெஸ்ட் ஆஃப் லக்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று சைந்தவி தனது பதிவில், "எனது கணவரின் தங்கையின் முதல் படம் க/பெ. ரணசிங்கம்'. எனக்குப் பெருமையாக இருக்கிறது ஸ்வீட்டி. உனக்கு எந்தன் வாழ்த்துக்கள். உனது ஆசைகள் மற்றும் கனவுகள் அனைத்தும் நிஜமாகட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

பவானி ஸ்ரீ இதற்கு முன்னதாக அமலா முதன்மை வேடத்தில் நடித்திருந்த 'High Priestess' என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 24 மே 2020