மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

சங்கடத்தில் சத்யராஜ்

சங்கடத்தில் சத்யராஜ்

திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரின் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்பட இருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் இயக்குநர், நாயகன், மற்ற நடிகர்கள் உட்பட யாருக்கும் சம்பளம் பேசப்படவில்லை. படப்பிடிப்பு மற்றும் பட வெளியீட்டுக்கான செலவை மட்டும் செய்து படத்தைத் தயாரிக்க உள்ளனர்.

இந்த முயற்சிக்கு திரையுலகில் வரவேற்பு கிடைத்துள்ளது. தயாரிப்பு செலவுக்கான ரூபாய் 2 கோடியை 200 பங்குகளாகப் பிரித்து விருப்பமுள்ளவர்கள் வாங்கிகொள்ள அறிவிப்பை திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டார்.

24 மணி நேரத்தில் 230 பங்குகளுக்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது என அவர் அறிவித்திருக்கிறார். இதில் பெரும்பான்மையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பங்குகளை வாங்க சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

தெலுங்கு படங்களில் நடிக்க 2 முதல் நான்கு கோடி வரை சம்பளம் வாங்கக் கூடிய சத்யராஜ் சம்பளத்தை முதலில் வாங்காமல் சதவீத அடிப்படையில் நடிக்க ஒப்புக் கொண்டது தமிழ் திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'தீர்ப்புகள் விற்கப்படும்'. அறிமுக இயக்குநர் தீரன் இயக்கி வரும் இப்படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்து வருகிறார்.

மகளுக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் அப்பாவின் கதையான இதில் சத்யராஜ் மகளாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கிற இப்படம் வெளியீட்டுக்குத் தயாராக வில்லை.

ஏனென்று கேட்டால், இந்தப்படத்தில் நடிக்க சத்யராஜுக்குப் பேசப்பட்ட சம்பளம் இரண்டு கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் ஒன்றே முக்கால் கோடியைக் கொடுத்து விட்டார்கள். மீதிப்பணத்தைக் குரல்பதிவுக்கு முன்பு கொடுத்து விடுவதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக அதைக் கொடுக்க முடியாமல் குரல் பதிவை முடித்துக் கொடுங்கள். அதன்பின் வியாபாரம் முடித்து மீதிச் சம்பளத்தைக் கொடுத்து விடுகிறோம் என்று தயாரிப்புத் தரப்பில் கேட்டுக்கொண்டார்களாம்.

ஆனால் பேசியபடி குரல்பதிவுக்கு வரும்போது பணம் கொடுப்பதாக இருந்தால் வருகிறேன் என்று சத்யராஜ் சொல்லி விட்டாராம்.

அதனால் அந்தப்படம் வெளியீட்டுக்குத் தயாராகாமல் இருக்கிறது. இந்த நிலையில் சத்யராஜ் முன்கூட்டி சம்பளம் வாங்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தான் வியப்பு என்கிறார்கள்.

-இராமானுஜம்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon