மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ: க/பெ.ரணசிங்கம்

நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ: க/பெ.ரணசிங்கம்

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் க/பெ.ரணசிங்கம் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் இப்படத்தை கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துவருகிறார். ரணசிங்கம் என்ற டைட்டில் ரோலில் விஜய் சேதுபதி நடிக்க அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கும் படக்குழு, நேற்று(மே 22)படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. "சாதி மத அரசியல தாண்டி, இனி தண்ணியும் காத்தையும் வெச்சு தான் மொத்த உலக அரசியலும் நடக்கப் போகுது" என துவக்கத்திலேயே விஜய் சேதுபதி பேசும் வசனம் படத்திற்கான 'லீட்'ஆக அமைந்துள்ளது. பொறம்போக்கு இடத்தில் பட்டா போட்டு ஊருக்குள் நுழையும் கார்ப்பரேட் கம்பெனியால் ஏற்படும் விளைவுகளும் அதற்கு எதிர்வினையாற்றும் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது வாழ்க்கையையும் சுற்றி கதை நிகழும் என கணிக்க முடிகிறது. ஆதார் கார்டு விமர்சனம், ரேஷன் கார்டு கணக்கில் பெயரை எடுத்துவிடுவேன் என மிரட்டும் அதிகாரியிடம், "நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ" எனச் சீறும் ஐஸ்வர்யாவின் நடிப்பு என 1.40 நிமிட டீசரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டுகிறது க/பெ.ரணசிங்கம்.

இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து சில நாட்கள் முன் பேசியுள்ள ஜிப்ரான், அறம் படத்திற்கு பிறகு தமிழில் மிக முக்கியமான சினிமா இது என இப்படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-முகேஷ் சுப்ரமணியம்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon