மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

போனி கபூர் வீட்டில் மூவருக்கு கொரோனா தொற்று!

போனி கபூர் வீட்டில்  மூவருக்கு கொரோனா தொற்று!வெற்றிநடை போடும் தமிழகம்

பிரபல தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வீட்டில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித் கதாநாயகனாக நடிக்கும் வலிமை திரைப்படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது மும்பையில் லோகந்த்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் தங்கி இருக்கின்றனர். இவர்கள் வசித்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இந்தியாவிலேயே அதிக மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போனி கபூரின் வீட்டில் பணியாற்றி வரும் சரண் சாஹு என்ற இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போனிகபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'சரண் சாஹுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்கையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை தனிமைப் படுத்துவதற்கான வேலைகள் துவங்கியது.

நான், என் மகள்கள் மற்றும் வீட்டிலுள்ள பிற பணியாளர்கள் ஆகிய அனைவரும் நலமாக உள்ளோம். எங்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. லாக் டவுன் துவங்கியதிலிருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

மேலும் அடுத்த 14 நாட்களுக்கு எங்களை தனிமைப் படுத்திக் கொள்வோம். சரண் சாஹு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்' என்று அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அவரது வீட்டில் வேலை செய்யும் மேலும் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. முதல் நபருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவு வந்துள்ளது. எனினும் போனி கபூர் மற்றும் அவரது மகள்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை திரைப்படத்தையும், 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக பவன் கல்யாண் நடிக்கும் வக்கீல் சாப் படத்தையும் தயாரித்து வருகிறார். 'பிங்க்' திரைப்படம் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் அஜித் நடித்து வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாக்டவுன் பிரச்னைகள் காரணமாக 'வலிமை' மற்றும் 'வக்கீல் சாப்' படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon