மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

புதிய முயற்சிக்கு விஜய் சேதுபதி, கே.எஸ்.ரவிக்குமார் ஒத்துழைப்பு!

புதிய முயற்சிக்கு விஜய் சேதுபதி, கே.எஸ்.ரவிக்குமார் ஒத்துழைப்பு!

மின்னம்பலம்

கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு.

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் அந்த முயற்சியில் முன் நிற்கிறார்கள்.

இவர்கள் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்பட இருக்கிறது. அந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகையர் தேர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் இயக்குநர், நாயகன், மற்ற நடிகர், நடிகைகள் உட்பட யாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் இல்லை. படப்பிடிப்பு மற்றும் பட வெளியீட்டுக்கான செலவை மட்டும் செய்து படமெடுக்கப் போகிறார்கள். அதற்காக இவர்கள் ஒதுக்கியிருக்கும் தொகை இரண்டு கோடி ரூபாய்.

இந்த இரண்டு கோடியில் படத்தை 30 நாட்களில் எடுத்து அடுத்த 30 நாட்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்து அதிகபட்சமாக 70 நாட்களில் படத்தை நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதன் மூலம் கிடைக்கின்ற மொத்த வருவாய், பிற உரிமைகள் மூலம் கிடைக்கும் தொகையை மொத்தமாகச் சேர்த்து அதில் தகுதிக்கேற்ப குறிப்பிட்ட விழுக்காடு தொகை ஒவ்வொருவருக்கும் சம்பளமாக வழங்கப்படும்.

இப்படிப்பட்ட முயற்சிக்கு கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் நாங்கள் உடன்படுகிறோம் என்று ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்திருக்கின்றனர்.

முதலில் போடப்படும் இரண்டு கோடியையும் இருநூறு பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஒருவர் அதிகபட்சம் பத்து பங்குகள் வரை வாங்கலாம் என்கின்றனர்.

இந்த முயற்சி நல்லபடியாகச் செயல்படுத்தப்பட்டால், படங்களின் வியாபார அடிப்படையில் சம்பளம் எனும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். அப்படி நடந்தால் தனிப்பட்ட தயாரிப்பாளர் மட்டும் முதலீடு செய்து லாப நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்கின்றனர்.

-இராமானுஜம்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon