மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு!

மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு!

சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமான ஊரடங்கு உத்தரவால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து மார்ச் 30 ஆம் தேதியே மின்னம்பலத்தில், சீரியல்கள் நிறுத்தம்; கண்ணீர் வடிப்பது யார்? என்ற தலைப்பில் சின்னத் திரை கலைஞர்களின் பொருளாதார நெருக்கடியை சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா மூலமாக வெளிப்படுத்தியிருந்தோம்.

ஊரடங்கு உத்தரவில் தமிழக அரசு சில துறைகளுக்கு தளர்வுகளை வழங்கியுள்ள நிலையில், சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்தனர்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மீண்டும் படப்பிடிப்பை துவங்க அனுமதி கோரி தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் படப்பிடிப்புத் தளத்தில் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் குறித்தும் அரசு அறிவுறுத்தி உள்ளது அதன்படி, 'சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது' என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும், "பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. எனினும் ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அதே போன்று, படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் முன் அனுமதி பெறவேண்டும்.

மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். படப்பிடிப்புக்கு வருகைதரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி சின்னத்திரை கலைஞர்களை மட்டுமன்றி சீரியல் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

4 நிமிட வாசிப்பு

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம் !

8 நிமிட வாசிப்பு

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம்  !

சிம்புவின் டப்பிங், குடும்பப் பாடல்: வைரலாகும் மாநாடு!

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் டப்பிங், குடும்பப் பாடல்: வைரலாகும் மாநாடு!

வியாழன் 21 மே 2020