cகொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட விஜய்

entertainment

கொரோனா தொற்றின் தீவிர காலகட்டத்தில் கூட அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார் விஜய். கடந்த சில நாட்களாக விஜய்யை அவரது மன்றத்தினர், ஊடகங்கள், நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் என பலரும் பல முனைகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறார் விஜய்.

ஏப்ரல் 12ஆம் தேதி, [பெற்ற மகனுக்காக தவிக்கும் விஜய்](https://www.minnambalam.com/entertainment/2020/04/12/21/vijay’s-longing-for-his-son-who-struck-in-canada) என்ற தலைப்பில் விஜய் கனடாவிலிருக்கும் தனது மகனுக்காக காத்திருப்பதைக் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், விஜய்யை சமீப நாட்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது வீட்டு ‘லேண்ட்லைனை’ கூட எவரும் எடுக்கவில்லை என்ற தகவல் கிடைத்ததும் நமது மின்னம்பலம் சார்பில் இது குறித்த விசாரணையில் இறங்கினோம். அதில், விஜய் தன்னைத் தானே சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தற்போது அவரது வீட்டில் அவரும், மனைவி சங்கீதா மட்டுமே உள்ளதாகவும் வீட்டில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. மாஸ்டர் பட பாடல் வெளியீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பே விஜய், தனது மகன் சஞ்சயை கனடா சென்று பார்த்துவிட்டு திரும்பியிருக்கிறார். அதன் பின்னர், ஒரு மாத காலத்திற்குப் பின் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே விஜய், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமைப்படுத்துதலில் இருந்திருக்கிறார். தனிமைப்படுத்துதலுக்கு முன், விஜய்யுடன் எப்போதும் இருக்கும் அவரது பாதுகாவலரையும் டிரைவரையும் அழைத்து ஊரடங்கு காலம் வரை அவர்களை அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அதே சமயம், வீட்டிலுள்ள பணியாளர்களையும் அனுப்பியிருக்கிறார். விஜய் நலமாக இருந்தாலும், முன்னெச்சரிகை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதனால் விஜய்யின் மொபைல் பெரும்பாலும் சுவிட்ச் ஆஃபிலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய மகனிடம் மட்டும் வீடியோ காலில் பேசும் விஜய், மற்ற நேரங்களில் யாருடனும் பேசாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் நாமக்கல் மாவட்ட நற்பணி மன்றத்தினர் விஜய் நற்பணி மன்றத்தலைவரை தொடர்பு கொண்டிருக்கின்றனர். காரணம், விஜய் நற்பணி மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மன்றத் தலைவர் சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட மன்றத்தலைவரும் விஜய்யை தொடர்பு கொள்ள பலமுனைகளிலும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், விஜய்யின் வீட்டு லேண்ட்லைனைக் கூட யாரும் எடுக்க முடியாத சூழல் இருக்கும் போது, விஜய்யின் குடும்பத்தினரை வைத்து அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார் மன்றத்தலைவர். ஏற்கனவே தனது மகனின் பிரிவில் இருக்கும் விஜய்க்கு மற்றொரு அதிர்ச்சியாக இந்தச் செய்தி விழுந்திருக்கிறது. உடனடியாக, மறைந்த நாமக்கல் மாவட்ட மன்றத் தலைவர் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட விஜய் 30 நிமிடங்களுக்கும் மேல் அவர்களிடம் பேசி ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார். மேலும், “லாக் டவுன் முடிந்த பின் நிச்சயம் உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாக வந்து சேரும்” எனக் கூறி மன்றத்தினரை அக்குடும்பத்திற்கு பக்கபலமாய் இருக்கச் சொல்லியிருக்கிறார் விஜய்.

இது ஒரு புறமிருக்க, மாஸ்டர் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் விநியோகிஸ்தர்கள் சார்பில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாஸ்டர் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை 90 கோடி ரூபாய்க்கும், கேரளா திரையரங்க உரிமை 9 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 30 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவேண்டிய படம், ஊரடங்கால் தள்ளிப்போனதையடுத்து, படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே ‘படம் நினைச்ச மாதிரியே நல்லா வந்திருக்கு’ என்ற விஜய்யின் வார்த்தையை நம்பித்தான் அவர்கள் இத்தனை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். இந்நிலையில், படம் சொன்ன தேதியில் வெளியாகாததால் சிக்கலில் மாட்டியுள்ளனர். விஜய்யுடன் நேரடியாக பேசும் சில விநியோகிஸ்தர்கள் அவரைத் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால், இணை தயாரிப்பாளர் லலித் குமாரை தொடர்பு கொண்டு, “நாங்க வட்டிக்கு வாங்கித் தான் பணம் கொடுத்திருக்கிறோம். படம் சொன்ன தேதில வெளியாகல. அதனால, வட்டிக்கு கட்ட வேண்டிய பணத்தை மட்டும் கொடுங்க” என்று வலியுறுத்தி வருகிறார்களாம்.

தற்போதைய சூழ்நிலை, கணிக்கமுடியாத நிலையில் இருப்பதால் விஜய் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டு தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்கின்றனர் நெருக்கமானவர்கள்.

**முகேஷ் சுப்ரமணியம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *