மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

டிக் டாக்: லாக் டவுன் சமையல் போட்டி!

டிக் டாக்: லாக் டவுன் சமையல் போட்டி!

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருந்து வீடியோ வெளியிடும் பயனாளிகளுக்காக டிக் டாக்கில் சமையல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். நோய்த்தொற்று குறித்த அச்சம், வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை போன்றவை ஒருபுறம் மக்களை பயமுறுத்தினாலும், மறுபுறம் தங்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை எவ்வாறு சிறப்பாக செலவழிப்பது என்பதையும் சிந்தித்து வருகின்றனர்.

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான சில விஷயங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலை நிமித்தமாக ஓரம் கட்டி வைத்திருந்த தங்கள் திறமைகளைப் பலரும் டிக் டாக் வாயிலாக வெளிக்காட்டத் துவங்கியுள்ளனர். நடிப்பு, நடனம், ஓவியத்திறமை, சமையல் நுணுக்கம் என அனைத்தையும் வீடியோக்களாக வெளியிட்டு பலரும் பிரபலமடைந்து வருகின்றனர்.

அவ்வாறு லாக் டவுன் நேரத்தை தங்களுடன் செலவிட்டு வரும் பயனாளிகளுக்காக சமையல் போட்டி ஒன்றை டிக்டாக் செயலி அறிவித்துள்ளது. அத்துடன் அந்தப் போட்டிக்கு பரிசாக 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் டிக் டாக் தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது விருப்பமான உணவை சமைத்து #tiktokchef என்ற ஹேஷ் டேகைப் பயன்படுத்தி டிக் டாக்கில் பதிவேற்ற வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த சமையல் குறிப்புகளை தேர்வு செய்வர். ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் இந்தப் போட்டியின் முடிவுகள் தினமும் இரவு 8 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தங்கள் நேரத்தை சிறப்பாக செலவிட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு சிறந்த வாய்ப்பையும், அத்துடன் சிறப்பான பரிசுகளையும் டிக் டாக் அறிவித்துள்ளது. இது டிக் டாக் பயனாளிகளைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

-இரா.பி. சுமி கிருஷ்ணா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon