மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்சம் நிதியுதவி!

திரைப்படத் தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்சம் நிதியுதவி!

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்தியாவே முடங்கிப் போயிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதற்கு முன்பாகவே திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இது முன்னணி நடிகர்கள் துவங்கி சினிமாத்துறையில் தினசரி வேலை செய்துவரும் தொழிலாளர்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது.

பிரபல நடிகர்கள், பிரம்மாண்ட பொருட்செலவில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பொருளாதாரத்தில் இறக்கத்தை சந்திக்க வைத்துள்ளது. ஆனால் திரைப்படங்களையும், படப்பிடிப்புகளையும் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்துக்கான வழியாகக் கொண்டிருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெப்சி அமைப்பில் உறுப்பினராக உள்ள 15 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ முன்னணி நடிகர்கள் முன்வர வேண்டுமென்று அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், ஹரீஷ் கல்யாண், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதி உதவிகளையும், உணவுப்பொருட்களையும் வழங்கி வந்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா தொழிலாளர்களுக்காக 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இக்கட்டான சூழலில் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாராவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு நன்றி கூறும் விதமாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி வெளியிட்ட அறிக்கையில் நயன்தாராவிற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon