மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

டீ கடை வைப்பதே லட்சியம் :அப்டேட் குமாரு

டீ கடை வைப்பதே லட்சியம் :அப்டேட் குமாரு

பத்து நாளா வெளிய போவாம வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடக்குறோமே, வெளிய போய்ட்டு வந்தவங்ககிட்ட உலகம் எப்படி இருக்குன்னு கேப்போம்னு ஃபோன் போட்டேன். ஒரு பயலும் எடுக்கல. எல்லாம் உருப்புட்ருவாங்களோன்னு பாத்துக்கிட்டே உக்காந்திருந்தா, எப்பவுமே தண்ணியோடவே சுத்துற ஃபிரெண்டு ஒருத்தன் வீட்டுப் பக்கமா போனான். என்னடா டாஸ்மாக் தொறந்துருக்கான்னு பாக்க போய்ட்டு வர்றியான்னு கேட்டா, அட டாஸ்மாக் மூடியிருக்குறது கூட 3 நாள் தான் மாப்ள கஷ்டமா இருந்துச்சு. அப்படியே பழகிருச்சு. ஆனா, இந்த டீ-காபி குடிக்காம தான் இருக்க முடியல. நிம்மதியா சரக்கடிக்க முடியலயேன்னு அம்மா-அப்பாவையெல்லாம் ஊர்லயே விட்டுட்டு வந்தேன். இப்ப என்னடான்னா ஒரு டீ-க்கு வழியில்லாம தெருத் தெருவா அலையுறேன். நம்ம வீட்ல ஏதும் காபி போட்டீங்களான்னு கேட்டான். வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்றேன். அதனால நான் தான் டீ போட்டேன். குடிக்கிறியான்னு கேட்டா, போற உசுரு டீ குடிக்காமலேயே போகட்டும்னு போய்ட்டான். ஏண்டா டீ போட்டது ஒரு குத்தமாடான்னு யோசிச்சிக்கிட்டே வந்து டீ போட்டுக்கிட்டு இருக்கேன். அப்டேட்டை படிங்க. பால் பொங்கிருச்சு. அடுப்பை கழுவி வெச்சிட்டு வர்றேன்.

Tawseef Thug

சரக்கு கிடைக்காம அலையுறவனுங்களவிட கடைல டீ குடிக்க அலையுறவனுங்க தான் அதிகமா கிறுக்கு புடிச்சு ரோட்டுல சுத்துறானுங்க பாவத்த..

மாஸ்டர் பீஸ்

வாழ்வை எங்கு எவ்வளவு தோண்டிப் புதைத்தாலும் சிலர் அதைத் தோண்டி எடுத்து என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்!

அஜ்மல் அரசை

மொத்தம் 411 கேஸ் -5 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

மொத்தம் 411 கேஸ் -6 மணிக்கு சுகாதாரத்துறை செயலாளர் அக்கா பீலா ராஜேஷ் அறிவிப்பு.

Sudha

லாக் டவுனுக்கு வேற வழியில்லாம எப்படியோ பழகிட்டோம். இப்ப புது கவலை, லாக் டவுன் முடிந்த பிறகு, எப்படி குடும்பத்தவரை, நேரத்துக்கு எழுப்பி, ஸ்கூலுக்கும், ஆபீசுக்கும் அனுப்புவது?

இடும்பாவனம் கார்த்தி

நாங்கள் இந்தியர்கள்; இந்தியில்தான் பேசுவோம் : ரோகித் சர்மா

இந்தியைத் தாய்மொழியாய் கொண்டவர்கள் மட்டும்தான் இந்தியர்கள். மற்றவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள்; மொழிவழித்தேசிய இனத்தின் மக்கள். இந்தியாவில் உள்ளோர் இந்தியர் என்பது கற்பிதம்;அது இந்திய அரசியலமைப்பு சாசனமே கூறாத ஒன்று!

சோலை ராஜா

பிரச்னைகளை தீர்க்க முடியாததால் அறிவு மந்தமாகி விட்டது என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். சூழ்நிலையை நாம் எப்படி அணுகிறோம் என்பதில் தான் பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது.

சரவணன் Ucfc

அழகில் தான் ஆபத்தும் இருக்கும்னு சொல்வாங்க.. இந்த கொரோனாவும் அப்படிதான் போல, பார்க்க அழகா பந்து மாதிரி இருந்துக்கிட்டு நம்ம வாழ்க்கையில் இப்படி விளையாடுதே.

அந்தணன்

அந்தணர்... என்பார் நெல்லை. அந்த ‘ர்’ ஒரு நாள் கூட ‘ன்’ ஆனதில்லை. கடைசிகாலத்து நெல்லை எனக்கும் பிடிக்காமல்தான் போனார். சுழல் இழுத்துக் கொண்டதை போல, அவரை இழுத்துக் கொண்டது அது. இந்த நேரத்தில் நெல்லை பாரதி பற்றிய நினைவுகள் பொங்கி வந்தாலும், நான் எப்பவோ எழுதிய ஒரு சிறுபதிவை மீள் பதிவு செய்கிறேன். அவரை பற்றி பேச இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. போய் வாருங்கள் நெல்லை! அடுத்த பிறவியில் ‘தண்ணியில்லா’ காட்டில் பிறக்க பிரார்த்தனைகள்!

நெல்லை பாரதி அப்போது ஒரு புலனாய்வு இதழில் நிருபராக இருந்தார். காலை பத்து மணிக்கு சுமாருக்கு இவர் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஏறினார் செக்கர் ஒருவர். நல்ல கோடை காலம். பஸ்சை ஜெமினி பாலம் அருகே ஓரம் கட்டிவிட்டார் டிரைவர். டிக்கெட், டிக்கெட்... என்று பரிசோதித்துக் கொண்டே வந்தார். அதற்குள் பலர் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்று பெருமூச்சு விட்டார்கள். அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டார்கள் பலர். ஏனென்றால் அது அலுவலகம் போகிற நேரம்.

பாரதி சும்மாயில்லாமல், "பீக் அவர்ஸ்ல செக் பண்றீங்க. பரவால்ல. வண்டிய எதுக்கு நிறுத்தறீங்க? அது பாட்டுக்கு போகட்டுமே, நிறைய பேரு ஆபிசு போகணும்லே..." என்றார். செக்கருக்கு மூக்கு மேல் மிளகாய் பொறிந்தது. "யோவ்... முதல்ல உன் டிக்கெட்டை எடு" என்றார். அவ்வளவுதான், பாரதிக்குள் இருந்த அயோத்தி குப்பம் வீரமணி 'விசுக்' என்று எழுந்து கொள்ள, செக்கரை இரண்டு கைகளாலும் இறுக கட்டிக் கொண்டார். "டேய்... மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு. முதல் பக்கத்திலே போட்டு தாளிச்சிடலாம்" என்றார். பக்கத்தில் இருந்த போட்டோகிராபர் அவசரம் அவசரமாக கேமிரா பையை ஓப்பன் செய்ய, அடடா... பத்திரிகைகாரனுககிட்ட மாட்டிகிட்டமே என்பதை உணர்ந்து பாரதியின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்தார் செக்கர்.

பின்னாலேயே நெல்லை பாரதியும் குதிக்க, அயன் படத்தில் வருகிற மாதிரி பிரமாதமான சேசிங். கொஞ்ச து£ரம் விரட்டிக் கொண்டே ஓடிய நெல்லை பாரதி, பின்னால் திரும்பி செக்கர் வந்த ஜீப்பை பார்த்ததும் ஓட்டத்தை நிறுத்திவிட்டார். "எப்படியிருந்தாலும், இந்த ஜீப்பை எடுக்க நீ வந்துதானே ஆகணும் மாப்ளே, வா" என்பது அவரது கணக்கு. பஸ்சை போக சொல்லிவிட்டு இவரும் போட்டோகிராபரும் செக்கரின் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. இவர்களும் போவதாக இல்லை. செக்கரும் வருதாக இல்லை. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒருவர் மெல்ல இவர்கள் அருகில் வந்து, "சார்... செக்கரு தெரியாம பண்ணிட்டாராம். உங்களுக்கு பயந்து வள்ளுவர் கோட்டம் சந்துக்குள்ளே நிக்கிறார். நீங்க போயிட்டீங்கன்னா இந்த ஜீப்பை எடுத்திட்டு போயிடுவாராம்" என்றார். "எங்க நிக்கிறாரு, காட்டு?" என்று வந்தவரை இழுத்துக் கொண்டு கிளம்பினார்கள் நெல்லையும், போட்டோகிராபரும்.

சொன்ன மாதிரியே வள்ளுவர் கோட்டம் சந்துக்குள் பம்மிக் கொண்டு நின்றார் செக்கர். து£ரத்திலேயே அவரை பார்த்துவிட்ட நெல்லை, பின்புறமாக ஓடிப்போய் அவரை இறுக்கமாக கட்டிக் கொண்டார். "டேய் மாப்ளே, எட்றா போட்டோவ" என்றார். செக்கர் திமிர, நெல்லை இறுக்க, இறுதி வெற்றி போட்டோகிராபருக்கு.

மார்பளவு போட்டோ போதும் என்றாலும், பின்னால் நின்று இறுக்கிய பாரதியின் கைகளும் அந்த மார்பளவு போட்டோவில் மறைக்க முடியாமல் விழுந்திருந்தது. "போடுங்க அந்த கையோடவே" என்றார் எடிட்டர். எல்லாருக்கும் கையளவு மனசு.

பாரதிக்கு மட்டும்தான் 'கையளவு' துணிச்சல்!

-லாக் ஆஃப்.

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon