மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

‘எங்கே இருக்கிறது மனிதநேயம்’: இயக்குநர் ரத்னகுமார் கோபம்!

‘எங்கே இருக்கிறது மனிதநேயம்’: இயக்குநர் ரத்னகுமார் கோபம்!

ஊரடங்கு உத்தரவின் காரணமாக நமது நாட்டில் அரங்கேறிவரும் சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பிரபல இயக்குநர் ரத்னகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்னகுமார். தொடர்ந்து அமலாபால் கதாநாயகியாக நடித்த ‘ஆடை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கவனம் ஈர்த்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இவர் தனது ட்விட்டர் பதிவுகள் மூலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள சூழலில், பல்வேறு பிரபலங்களும் விழிப்புணர்வு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய வந்த சுகாதார ஊழியர்கள் மீது மக்கள் கல் எறிந்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரத்னகுமார், “மனிதநேயம் எங்கே இருக்கிறது? இது காட்டுமிராண்டித்தனம். இந்த செய்தியைப் பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது. சில நேரங்களில், சில விஷயங்களைக் கற்பிக்க இந்த வைரஸ் நமக்குத் தேவையானது தான் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் ஒருவர் தனியாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. அந்தப் புகைப்படத்தில் அவரது அருகே அவருடைய மனைவியும், மகளும் அமர்ந்து உணவு பரிமாறுவது போன்று கற்பனையாக மாற்றியமைக்கப்பட்டது. அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்த இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் ரத்னகுமார், “கண்ணீர் வருகிறது. இந்த கோடைக் காலத்திலும் 24 மணி நேரமும் நமக்காக உழைத்து வரும் இந்த போராளிகள் மீது மிகப்பெரிய மரியாதை வருகிறது. கொரோனா வைரஸ் முடிவிற்கு வருவதற்குள் மனிதமும் மனிதாபிமானமும் மேலும் வளரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon