மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

டிக் டாக்: பத்திரமாக இருங்கள், இயற்கை காத்திருக்கிறது!

டிக் டாக்: பத்திரமாக இருங்கள், இயற்கை காத்திருக்கிறது!

பம்பரமாக சுழன்று கொண்டிருந்தவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க சொல்வதில் சிரமம் இருக்கத் தான் செய்கிறது.

21 நாட்கள் எப்படித்தான் வீட்டுக்குள் இருப்பது என்ற கேள்வியை எழுப்பி, ‘வெளியே சென்றால் என்னதான் ஆகும்’ என்று வீம்பாகக் கூறுபவர்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டிய அவசியம். உங்களை முடக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடல் அல்ல இந்த ஊரடங்கு. நீங்கள் முழுவதுமாக முடங்கி விடக் கூடாது என்பதன் முன்னெச்சரிக்கை. பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமானம் உங்களுக்கு இருந்தால் கூட அதற்கும் நீங்கள் களத்தில் இறங்கித் தான் வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை. வீதியில் இறங்கிப் போராட இது உரிமை மறுப்போ, மீட்புப் பணிகளில் ஈடுபட இது பெரு வெள்ளமோ அல்ல. ‘வைரஸ்’. கண்ணுக்குத் தெரியாத வைரஸ். எங்கிருந்து, யார் மூலமாக, எப்படி வரும் என்பது கூடத் தெரியாத வைரஸ்.

எந்த அளவுக்கு நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களிடம் இருந்து பிறரும் பாதுகாக்கப்படுகிறார்கள். ‘எனக்கு என்ன வந்தாலும் பரவாயில்லை. நான் வெளியே தான் சுற்றித் திரிவேன்’ என்று கூறி நீங்கள் வீதிக்குச் சென்றால், உங்களுடன் சேர்த்து பலரையும் கொலை செய்ய நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்று தான் அர்த்தம். ஏனென்றால் இது வெறும் வைரஸ் அல்ல, வைரஸ் ‘தொற்று’. ஒருவரில் இருந்து 100 பேரை அடையவும், அந்த 100 என்ற எண்ணிக்கை ஆயிரமாக மாறவும் அதிக நேரம் தேவைப் படவில்லை. கூடுமான வரை உங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இந்த உலகத்தில் பார்க்க வேண்டிய இன்னும் எத்தனையோ இருக்கிறது. இந்த இயற்கையே உங்களுக்காகக் காத்திருக்கிறது. டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டிருந்த ஒரு வீடியோவைப் பார்க்கும் போது, மனதின் ஆழத்தில் தோன்றியது. ‘இயற்கையின் இந்த அழகு காட்சியை ஒருமுறை பார்ப்பதற்காகவேனும் நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று.

@user6342176239290

Beautiful, isn't it? ##tiktok ##trnding ##goviral ##viral

♬ original sound - 两颗小小的心♥️♥️

பனிபடர்ந்த மலை நடுவே, பூச்செடியின் மேல் இருக்கும் கண்கவர் கிளிகள் இரண்டு. அந்த வீடியோவும், அதில் இடம் பெற்ற காட்சிகளும், இயற்கையின் இசையும் எல்லாம் சேர்ந்து மனதை இலகுவாக்குகிறது.

இப்படி எல்லாம் இயற்கையிலும், இந்த உலகிலும் நீங்கள் பார்க்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது. எதற்காக ஆபத்தை நீங்களே தேடிச் செல்ல வேண்டும்? பாதுகாப்பாக இருங்கள்.

-டிக் டாக் யூஸர்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon