மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனா போராட்டம்: ஒரு மில்லியன் டாலர்கள் வழங்கிய அர்னால்டு

கொரோனா போராட்டம்: ஒரு மில்லியன் டாலர்கள் வழங்கிய அர்னால்டு

பிரபல நடிகர் அர்னால்டு, கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வருபவர்களுக்கு உதவும் விதமாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்,

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக இயங்கி வந்த சாலைகளும், தொழில் நிறுவனங்களும் இன்று ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள்கூட சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளன. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த கொடிய நோயின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் இத்தாலியில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும், ஸ்பெயினில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் இதன் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அனைத்து விதமான வளர்ச்சிகளிலும், வசதிகளிலும் முன்வரிசையில் நிற்கும் அமெரிக்கா, கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இரண்டு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில் மரண எண்ணிக்கை 5,600-ஐக் கடந்துவிட்டது. இது அமெரிக்காவில் வசித்து வரும் மக்கள் அனைவரையும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவ ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவும் விதமாக பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஸ்னேகர், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 7,63,22,500 ரூபாய்) நன்கொடையாக அளித்துள்ளார்.

மருத்துவத் தேவைகளுக்கு உதவும் விதமான உபகரணங்களையும், தேவையான மாஸ்க்குகளையும் வாங்கி அவை அனைத்தும் சரியாகக் கிடைத்துள்ளதா என்று தானே பரிசோதித்துப் பார்க்கும் வீடியோவையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தான் ஒரு மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், ‘சூழல் இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று வீட்டிலிருந்துகொண்டே கவலைப்படுவதால் நல்லது நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மருத்துவமனைகளில் நமக்காகப் போராடிவரும் நிஜ ஹீரோக்களைப் பாதுகாக்க இது ஓர் எளிய வழி. அதில் நானும் பங்கேற்றுள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த உதவிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon