மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

‘நான் ஐசியூவில் இல்லை’: கொரோனா டெஸ்ட் குறித்து கனிகா கபூர்

‘நான் ஐசியூவில் இல்லை’: கொரோனா டெஸ்ட் குறித்து கனிகா கபூர்

தான் ஐசியூவில் இல்லை எனவும், விரைவில் கொரோனா டெஸ்ட் நெகட்டிவாக வரும் எனவும் பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 9ஆம் தேதி லண்டனில் இருந்து மும்பைக்குத் திரும்பிய பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வந்ததும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பிரபலங்கள் பங்கேற்ற இரவு விருந்தில் கலந்துகொண்ட அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதன் காரணமாக மார்ச் 20ஆம் தேதி லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்புடைய 260 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அலட்சியமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தார். இந்த நிலையில் நான்காவது முறையாக எடுக்கப்பட்ட டெஸ்டிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து நமது மின்னம்பலத்தில் மீண்டும் கொரோனா உறுதி: கனிகா கபூர் மீது வழக்குப்பதிவு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து பாடகி கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “உங்களுடன் எனது அன்பைப் பகிர்கிறேன். உங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே. உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் நான் ஐசியூவில் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். அடுத்தமுறை டெஸ்ட் செய்யும்போது எனக்கு நெகட்டிவ் வரும் என்று நம்புகிறேன். எனது வீட்டிற்கு சென்று, என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பார்க்க நான் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் , ‘வாழ்க்கை, நேரத்தை சிறப்பாக செலவிடுவது குறித்து நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, ஆனால் நேரம் நமக்கு வாழ்க்கையின் மதிப்பை கற்றுக்கொடுக்கிறது’ என்ற தத்துவ வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

திங்கள், 30 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon