மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

‘அசால்ட்டாக இருக்காதீங்க’: கண்ணீருடன் வடிவேலு வேண்டுகோள்!

‘அசால்ட்டாக இருக்காதீங்க’: கண்ணீருடன் வடிவேலு வேண்டுகோள்!

கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்துவரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தாலும், மீம்களின் வழியாக தினமும் மக்களை சிரிக்கவைக்கும் கருவியாக மாறியிருப்பவர் நடிகர் வடிவேலு. தனது யதார்த்தமான நடிப்பினால் பெரும் ரசிகர்களைப் பெற்ற இவர், மீண்டும் எப்போது வெள்ளித் திரையில் மின்னப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வந்தது. கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்ததிலிருந்தே, அது குறித்த எச்சரிக்கை, விழிப்புணர்வு, வதந்திகள் மீதான விமர்சனம் என அனைத்துத் தகவல்களும் இவரை மையமாக வைத்த மீம்களாக வெளிவர ஆரம்பித்தது.

கொரோனா வைரஸ் தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் நிலையில் பிரபலங்கள் பலரும் அதுகுறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வடிவேலு மக்களுக்குப் புரிதல் ஏற்படும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ரொம்ப மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவு பண்ணி எல்லாரும் அரசாங்கம் சொல்ற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே இருங்க. மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கு. தன் உயிரைப் பணயம் வைத்து எல்லாரையும் காப்பாற்றிக் கொண்டிருக்காங்க. அவர்களுக்கு நாம ஒத்துழைப்பு கொடுக்கணும்.

அதுபோல, காவல் துறையினர் நம்மைக் காவல் காத்து, ‘பாதுகாப்பாக இருங்க, தயவு பண்ணி வெளியே வராதீங்க’ன்னு கெஞ்சி கும்பிடுற அளவுக்கு இன்னிக்கு இருக்கு. யாருக்காக இல்லையோ நம்ம சந்ததியினருக்காக, நம்ம வம்சாவளிக்காக, நம்ம புள்ள குட்டி உயிரைக் காப்பாத்துறதுக்காக நாம எல்லாரும் வீட்டில் இருக்கணும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீங்க. அசால்ட்டாக இருக்காதீங்க. ரொம்ப பயங்கரமாக இருக்கு. தயவு பண்ணி வெளியே வராதீர்கள்” என்று கண்ணீர் மல்க கைகூப்பிக் கேட்டுள்ளார்.

தனது நகைச்சுவை மூலமாக அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேலு இந்த வீடியோவின் மூலம் கண்ணீர் சிந்தி, சிந்திக்க வைத்துள்ளார். இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 27 மா 2020