கொரோனா அச்சம்: குதூகலப்படுத்துமா ஆர்ஆர்ஆர்?


பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவே ஆர்வமுடன் எதிர்பாத்துக் காத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படம் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது. இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்றவர்களும் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
டிவிவி தானய்யா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் இன்று (மார்ச் 25) வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடே ஸ்தம்பித்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதைப் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் அதைக் குறிப்பிடும்விதமாக, ‘உங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து இதை ரசிக்கும்படி என் குழுவின் சார்பாக நான் ரசிகர்களிடமும் பார்வையாளர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஒரு முக்கியக் காரணத்துக்காக நாடுமுழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த ஒரு காரணத்துக்காகவும் கூட்டம் கூடாதீர்கள்’ என்று ராஜமெளலி பதிவிட்டுள்ளார்.
It's a time of global crisis. We wanted to do our bit in lifting up everyone's spirits. We are launching the long overdue Title Logo with Motion Poster of @RRRMovie, Tomorrow. Though I can’t promise any specific time now, as everyone of our team are working from home.
— rajamouli ss (@ssrajamouli) March 24, 2020
மேலும், “உலகமே தற்போது பெரும் நெருக்கடியில் இருக்கிறது. மக்களின் சோர்வு நிறைந்த மனநிலையைப் போக்க நாங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதனால் நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிடவுள்ளோம். எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதைக் குறித்து உறுதியாகக் கூற இயலாது. ஏனென்றால் மொத்த படக்குழுவும் வீட்டில் இருந்து பணியாற்றுகிறது” என்று விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா