மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

நயன்தாரா தரிசனத்துக்கு ரெடியாகும் ரசிகர்கள்!

நயன்தாரா தரிசனத்துக்கு ரெடியாகும் ரசிகர்கள்!

சினிமாவில் பல காலமாக ஒரு வழக்கம் இருந்துவந்தது. ஹீரோக்களுக்கான ஓப்பனிங் காட்சிகளில் பிரம்மாண்டத்தைக் கூட்டுவது போல, ஹீரோயின்களின் அறிமுகக் காட்சிக்கு அழகியலைக் கூட்டுவதாகச் சொல்லி அவர்களின் கை, கால், கம்மல் அணிந்திருக்கும் காது மடல், துள்ளி குதிக்கும் சிகை இவற்றை குளோஸ்-அப் காட்சிகளில் காட்டுவார்கள். இரண்டு மணிநேரம் ஓடும் திரைப்படத்தில் இந்தக் காட்சிகள் இடம்பெறுவது ஏதோ பரவாயில்லை என்றால், இப்போது படம் பற்றிய அறிவிப்பிலேயே அப்படித்தான் செய்கிறார்கள்.

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பற்றிய ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று நேற்று(27.02.2020) அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக், டீசர் என படத்தைப் பற்றி ஏதாவது வெளியாகும் என்று ரசிகர்கள்  ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கும் கேரக்டர் திரிசூலத்தை கையில் பிடித்திருப்பது போலவும், எதிரில் நான்கைந்து ரவுடிகள் நிற்பது போலவும் அந்த டிசைன் அமைந்திருக்கிறது. நயன்தாராவின் கை மட்டும் இடம்பெறும் போஸ்டரை  வெளியிடுவதற்கு 24 மணிநேரம் ரசிகர்களை காத்திருக்கவைப்பதா என சிலர் பொங்கி எழுந்துகொண்டிருக்க, நயன்தாராவின் ரசிகர்களோ ஆஹா, அம்மனாக நயன்தாராவைப் பார்க்கப்போகிறோம் என புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கின்றனர்.

ஆனால், இதில் முக்கிய சங்கதி என்னவென்றால், நாளை(29.02.2020) தான் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. இந்த போஸ்டரைப் பார்த்தபின் 24 மணிநேரம் காத்திருந்து ரசிகர்கள் விரதமிருந்தால் 29ஆம் தேதி மாலை 7 மணிக்கு அம்மன் காட்சியளிப்பாள் என ரசிகர்கள் நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். இப்படியே போனால், சூது கவ்வும் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு கோயில் கட்டியதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

-சிவா

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon