மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

விமல் படங்களுக்கு சிக்கல்!

விமல் படங்களுக்கு சிக்கல்!

பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். அந்தப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் குவிந்தது.

தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களுக்கு முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்து வந்த சூழ்நிலையில், ‘இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்கிற பழமொழிக்கு ஏற்ப நடிகர் விமல் வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகனாக புதிய தயாரிப்பாளர்களால் கொண்டாடப்பட்டார். இதன் விளைவாக ஒவ்வொரு படத்திற்கும் விமல் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வந்தார். ஆனால் எந்த படமும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.

மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் வழக்கமாக கையாளும் பார்முலாபடி சொந்தமாக படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்த விமல் ‘மன்னர்வகையறா’ திரைப்படத்தைத் தயாரித்தார். படத்தின் மொத்த

பட்ஜெட்டுக்கான செலவை முதல் ஷெட்யூல் படப்பிடிப்பிற்கு இயக்குநர் பூபதி பாண்டியன் செலவழித்து முடித்தார். இதன் விளைவாக படத்தை தொடரமுடியாத நெருக்கடி ஏற்பட்டது இந்த சூழ்நிலையில் படத்தை முடித்து வெளியிடும் பொறுப்பை ‘அரசு பிலிம்ஸ்’ நிதி உதவி அடிப்படையில் மேற்கொண்டது. ஆனால் படம் வெளியாகும் நேரத்தில் நடிகர் விமல் கடனை செட்டில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கான செலவையும்அரசு பிலிம்ஸ் ஏற்றுக்கொண்டது.

இந்த மொத்த தொகையும், தொடர்ந்து நடிக்கக்கூடிய ஒவ்வொரு படத்திற்கும் வாங்கும் சம்பளத்தில் இருந்து தவணை முறையில் கொடுப்பதாக விமல் உத்தரவாதம் அளித்தார். அதனை அரசு பிலிம்ஸ் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன்படி விமல் நடந்துகொள்ளவில்லை என்பதால் ‘அரசு பிலிம்ஸ்’ பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “ மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு, வணக்கம். நடிகர் விமல் தயாரித்த “மன்னர் வகையறா” படத்திற்கு அவர் கேட்டுக் கொண்டதால் ரூ. 5,35,00,000/- (ரூபாய் ஐந்து கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) கடனாக கொடுத்திருந்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பிறகு ரூ.1,35,00,000/- (ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஐந்து லட்சம் மட்டும்) மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி தொகையை திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தின் மூலம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதனை நம்பி நானும் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறேன். ஆனால் “மன்னர் வகையறா” படத்திற்குப் பிறகு ஏழு படங்களில் நடித்துவிட்டு எந்த பணத்தையும் விமல் திருப்பித் தரவில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி என்னுடைய NOC இல்லாமல் எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். உங்கள் நலனுக்காகவே இந்த கடிதத்தை நான் அனுப்புகிறேன் வேறு எந்த உள்நோக்கமும் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமல் கதாநாயகனாக நடித்துவரும் ஏழுக்கும் மேற்பட்ட படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

-இராமானுஜம்

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon