மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

வைரல் பாடகர்களைத் தேடும் டி.இமான்

வைரல் பாடகர்களைத் தேடும் டி.இமான்

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கேரளத் தொழிலாளர்களை இசையமைப்பாளர் டி.இமான் தேடி வருகிறார்.

தெய்வீகக் குரலும் சிறந்த திறமையும் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத பாடகர்கள் எத்தனையோ பேர் நம்மிடையே இருக்கிறார்கள். விருதுகள் வாங்க வேண்டும், திரைப்படங்களில் பாடவேண்டும் என்றெல்லாம் பெரிய கனவுகள் இல்லாமல், ‘ஒரே ஒரு முறை மைக் பிடித்து பாட முடியாதா, ஒரு மேடையில் ஏறிவிட வாய்ப்பு கிடைக்காதா?’ என்ற கனவுகளுடன் பல திறமையாளர்கள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.

இன்றைய சமூகவலைதளங்களின் பயன்பாடு அத்தகைய பல திறமையாளர்களை அடையாளம் காண பெரிதும் உதவி செய்துள்ளது. சமீபத்தில் ‘கண்ணான கண்ணே’ பாடலைப் பாடிய திருமூர்த்தி என்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞரான அவரது பாடலும் குரலும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அவரைத் தேடிக் கண்டறிந்ததோடு தனது இசையில் பாடவும் வாய்ப்பளித்தார்.

அதே போன்று இணையதளத்தில் வைரலான கேரளாவைச் சேர்ந்த இரு பாடகர்களைத் தேடிவருவதாக டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. தெளிவான குரலில் தெய்வீகமாகப் பாடும் அவரது வீடியோவிற்கு பிரபலங்கள் உட்படப் பலரும் ஆதரவு தெரிவித்துவந்தனர்.

அதேபோன்று சில வருடங்களுக்கு முன்னர் தினக்கூலியாக வேலை செய்துவந்த ராகேஷ் என்னும் இளைஞர், ‘உன்னைக் காணாது’ எனத் தொடங்கும் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற பாடலை அப்படியே பாடியிருந்தார். அவரது வீடியோவும் பலராலும் பகிரப்பட்டிருந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார். பாடகர் ஷங்கர் மகாதேவன் அந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததோடு மேடையில் பாடவும் வாய்ப்பளித்தார்.

இந்த நிலையில் தற்போது இமான் இவர்கள் இவரையும் தேடுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘நண்பர்களே நானும் மீண்டும் உங்களிடம் வந்துள்ளேன். இந்த இரு திறமையாளர்களையும் கண்டுபிடிக்க எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

சிறந்த திறமையாளர்களை அடையாளம் கண்டறிந்து சிறப்பான வாய்ப்புகள் அளித்துவரும் இசையமைப்பாளர் டி.இமானுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 26 பிப் 2020