மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

34 வருடங்களுக்குப் பிறகு... கமலைத் துரத்தும் லிப்-லாக்!

34 வருடங்களுக்குப் பிறகு... கமலைத் துரத்தும் லிப்-லாக்!

நடிகை ரேகா ஏற்கனவே பலமுறை பேட்டிகளில் சொன்ன ‘புன்னகை மன்னன் படத்தில் கொடுக்கப்பட்ட லிப்-லாக் என் அனுமதியின்று கொடுக்கப்பட்டது’ என்ற தகவல், தற்போது மீண்டும் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இம்முறை மீ-டூ இயக்கத்தின் உதவியுடன் வருவதால் இதன் மீதான விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்-ரேகா நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் ரிலீஸாகி 34 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்றுவரை அந்தப்படத்தினை மறக்கவைக்காமல் இருப்பது, அல்டிமேட்டான சில காட்சிகள். அது, கமல்-ரேவதியுடன் ஆடும் நடனம், ரேகாவுடன் செய்துகொள்ளும் தற்கொலை மற்றும் அதற்கு முன்பு வரும் அந்த லிப்-லாக் ஆகியவை புன்னகை மன்னன் படத்தை மற்றக்கடிக்காத சில காட்சிகள். இதில், ரேகாவுக்கு கமல் கொடுத்த லிப்-லாக் காட்சி தான் தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.

ரேகா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘புன்னகை மன்னன் படத்தில் கமல் அப்போது லிப்-லாக் கொடுக்கப்போகிறார் என்றே எனக்குத் தெரியாது. அந்தக் காட்சிக்கு முன்பு குதிக்கும்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று பாலச்சந்தர் சொன்னார். நான் கண்களை மூடிக்கொண்டேன். கமலிடம் நான் உன்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா என்று கேட்டார் பாலச்சந்தர். அவர் ஒன்-டூ-த்ரீ சொன்னதும் கமல் முத்தம் கொடுத்துவிட்டார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஏனென்றால், அப்படியொரு காட்சி இருப்பதாக எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் சம்மதித்திருக்கமாட்டேன். காட்சி முடிந்தும் கூட என் அதிர்ச்சி நீங்கவில்லை. அப்போது பாலச்சந்தரின் அசிஸ்டண்டாக பணிபுரிந்துகொண்டிருந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரிடம் என்னிடம் தகவல் சொல்லாதது பற்றிக் கூறினேன். அவர்கள் கவலைப்படவேண்டாம் என்றனர். அந்த லிப்-லாக் இந்தக் காட்சியை மேலும் உயர்த்தும் என்றனர். அப்படியில்லை என்றால் சென்சாரில் இந்தக் காட்சியை எடுத்துவிடுவார்கள் என்று சொன்னபோது ‘நான் சென்சார் என்றால் என்ன’ என்று கேட்டேன். ஏனென்றால் அப்போது எனக்கு 16 வயது தான்” என்று கூறியிருக்கிறார் ரேகா.

16 வயது பெண்ணுக்கு அப்படி லிப்-லாக் கொடுப்பதே தவறு, அதிலும் அவரது அனுமதி பெறாமலேயே லிப்-லாக் கொடுத்திருப்பது மிகவும் மோசமான செயல் என நெட்டிசன்கள் கமல்ஹாசன், வசந்த், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

-சிவா

புதன், 26 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon