மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கமல்-லைகா: கடிதப் பின்னணி!

கமல்-லைகா: கடிதப் பின்னணி!

இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்ட இரண்டு நாட்கள் திரையுலகினரால் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன்பின் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,  காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதால் சினிமா சங்கங்களும் அமைதியாகிவிட்டன. ஆனால், இந்தப் பிரச்சினையை கைவிடாமல் தற்போது போர்க்கொடி உயர்த்தியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன்.

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து குறித்து, இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். அந்தக் கடிதத்தில் “ஷூட்டிங் ஸ்பாட்டில் பணிபுரிபவர்கள் அனைவரது நலனையும் காப்பதற்கு ஏற்றவகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து, அவை சரிவர செயல்படுகிறதா என்பதை சீராய்வு செய்யதால் தான் தயாரிப்பு நிறுவனத்தின் மீது அதன் படத்தில் நடிக்கும் கலைஞர்கள், பணிபுரியும் தொழிலாளர்கள்(நான் உட்பட) ஆகியோருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு மீண்டும் ஷூட்டிங்குக்கு வருவார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்குக்கு, கமல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி தேவையானவற்றை செய்தால்தான் ஷூட்டிங்குக்கு வருவேன் என்று கமல் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்கின்றனர் படக்குழுவினர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் லண்டனில் இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும். மிக முக்கியமான சில காட்சிகளை கமல்ஹாசன், காஜல், ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருடன் லண்டனில் ஷூட்டிங் எடுக்கத் திட்டமிட்டிருந்தது படக்குழு. அதேசமயம், மற்ற கலைஞர்கள் பங்கேற்கும் காட்சிகளை EVP-யில்  செகெண்ட் யூனிட்டை வைத்து எடுப்பதாகத் திட்டம். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அத்தனை ஷூட்டிங்கையும் கமல் கேன்சல் செய்திருந்தார். அப்போது, லண்டன் ஷூட்டிங்கை மட்டுமாவது நடத்திவிடலாமே என லைகா தரப்பிலிருந்து அணுகியதால் தான் இந்த  காத்திரமான கடிதத்தை கமல் எழுதியிருக்கிறார் என்கின்றனர் படக்குழுவினர்.

“மிகுந்த ஆழமான வேதனையுடன் இதனை எழுதுகிறேன்” என்ற வார்த்தைகளுடன் தொடங்கியுள்ள கடிதத்தில், “நாம் யாருடன் சிரித்து, உணவருந்தி, பணியாற்றினோமோ அவர்கள் இனி வரப்போவதில்லை என்பதை உணரும்போது ஏற்படும் துக்கத்தை என்னால் வார்த்தைகளால் எழுதமுடியவில்லை” என இப்போதும் தொடரும் தன் வேதனையைக் குறிப்பிடுகிறார் கமல்.

மேலும் “பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து நான் சில நொடிகளிலும், சில மீட்டர்களிலும் தப்பித்திருக்கிறேன். இதனால் உண்டாகும் வலியை என்னால் வெளிப்படுத்தமுடியவில்லை. நாம் கொடுத்த இழப்பீடு எந்த விதத்திலும் நமது கடமை மீறப்பட்டதை ஈடுசெய்யாது. அதிகமான மனித உயிர்கள் ஈடுபடும் ஷூட்டிங்கில், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்வது ஒரு புரொடக்‌ஷன் நிறுவனத்தின் தலையாயக் கடமை. இதுபோன்ற விபத்துகள் முழு டீமின் மீதான நம்பிக்கையையும், புரொடக்‌ஷன் டீமின் மீதான நம்பிக்கையையும் தகர்த்துவிடும். ஷூட்டிங்கில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் பாதுகாப்புக்காக, புரொடக்‌ஷன் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் காப்பீடு பற்றிய நடைமுறைகளை நான் அறிய விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளதன் மூலம் லைகா நிறுவனத்தின் அடி மடியிலேயே கைவைத்திருக்கிறார் கமல்.

ஒவ்வொரு புரொடக்‌ஷன் டீமும், ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கு முன்பு எத்தனை நாள் ஷூட்டிங், அதில் எத்தனை பேர் வேலை செய்யப்போகிறார்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கான காப்பீடு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். ஆனால், புரொடக்‌ஷன் டீம்கள் இவற்றை செய்வதில்லை. முக்கியமான டெக்னீஷியன்களுக்கு மட்டுமே காப்பீடு போன்றவற்றை எடுக்கின்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவரவர் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட காப்பீடும், அவரவர் வீட்டில் எடுக்கப்பட்டிருந்த காப்பீடும் தான் தற்போது உதவிக்கொண்டிருக்கிறது. விஷயம் பெரிதானதால் கமலும், லைகா நிறுவனமும் அறிவித்த உதவித்தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லாமல், ‘நீங்கள் செய்துவைத்திருப்பது என்னவென்று கேட்டிருக்கும் கமல். இதையெல்லாம் சரிசெய்தால் தான் நான் உட்பட அனைவருக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு ஷூட்டிங்குக்கு வரமுடியும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கமலின் இந்த செயலை மிகத் துணிவானதாகப் பார்க்கிறது தமிழ் சினிமா. இந்தப் பிரச்சினை நீடித்தால் கமலுக்கும், லைகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர். ஒருவேளை லைகா கமலின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையென்றால் லைகாவின் மீதிருக்கும் சினிமாவின் நம்பிக்கை மொத்தமாகப் போய்விடும் என்கின்றனர்.

-சிவா

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon