மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

இந்தியன் 2: ராஜனுக்கு ஜாமீன், கைப்பற்றிய குற்றப்பிரிவு!

இந்தியன் 2: ராஜனுக்கு ஜாமீன், கைப்பற்றிய குற்றப்பிரிவு!

இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து மூன்று உயிர்களை பலி கொண்டு, பத்துக்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கவைத்திருக்கிறது. இந்த விபத்தின் முக்கிய காரணியாக அமைந்த கிரேன் ஆப்பரேட்டரை கைது செய்திருந்த காவல்துறை, தற்போது அவருக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறது.

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து நடைபெற்ற சில மணிநேரங்களில் பெரியளவில் தேடப்பட்டவர் கிரேன் ஆப்பரேட்டர் ராஜன். விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போன ராஜன், கிட்டத்தட்ட 24 மணிநேரம் வரை தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்தபின், ஷூட்டிங் ஸ்பாட் குறித்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட வேகமாக காவல்துறையினர் ராஜனை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர். போலீஸ் நடத்திய விசாரணையில் ‘எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லைட்மேன்களும், ஒளிப்பதிவாளரும் தான் அதிக எடையை ஏற்றினார்கள்’ என்று ராஜன் கூறியதாக தகவல் வெளியானது.

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து என்பதால், பெரியளவில் இந்த விபத்து மக்களிடையே பேசப்பட்டது. மக்களும், திரையுலகினரும் பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தனர். விபத்தின் தீவிரம் கருதி, இந்த வழக்கை உடனடியாக மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினார் சென்னை தலைமைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு விசாரணையை கையிலெடுத்ததும் புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இந்த வழக்கின் முக்கிய நபரான கிரேன் ஆப்பரேட்டர் ராஜனை, அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.

ராஜன் விடுவிக்கப்பட்ட அதேசமயம், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதியிடம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, நசரத்பேட்டை போலீஸ் தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon