மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

நடிகையின் கோபம்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

நடிகையின் கோபம்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை க்ரிதியிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

பயணிகளின் திருப்தியற்ற பயணம் என்பதில் ஆரம்பித்து எண்ணெய் நிறுவனங்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் என்பது வரை தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏர் இந்தியா நிறுவனத்தை நோக்கி வைக்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக ‘ஏர்-இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளும் விற்கப்படும்’ என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. சிக்கல் மேல் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தால் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை க்ரிதி கர்பண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமுடன் எழுதியுள்ளார்.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ் லீ’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை க்ரிதி கர்பண்டா. இவர் தற்போது தமிழில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் ‘வான்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார். பயணம் முடிந்து வெளியே வரும்போது க்ரிதியின் லக்கேஜை ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றி அனுப்பிவிட்டது அவருக்குத் தெரியவந்துள்ளது.

இதனால் கோபமடைந்த க்ரிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பிற்குரிய ஏர் இந்தியா எனது லக்கேஜை மீண்டும் தொலைத்ததற்கு உங்கள் நிறுவனத்துக்கு எனது நன்றிகள். கூடவே, உங்கள் ஊழியர்களுக்கு பயணிகளிடம் எவ்வாறு நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை வழிமுறைகளை முதலில் கற்றுக்கொடுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப்பதிவு பலராலும் பகிரப்பட்டதுடன் விவாதமாகவும் மாறியது. அதற்கு பதில் பதிவிட்ட ஏர் இந்தியா நிறுவனம், “நாங்கள் மனமார உங்களிடம் மன்னிப்பு வேண்டுகிறோம். தயவுகூர்ந்து இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.

அத்துடன் ‘ஃபைல் ரெஃபரன்ஸ் எண், லக்கேஜ் டேக் எண் மற்றும் பயண விவரங்களை அனுப்புங்கள், விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றும் ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு க்ரிதி, ‘உங்கள் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது லக்கேஜ் மீண்டும் கிடைக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மும்பை முதல் கோவா விமான நிலையம் வரையான உங்கள் குழுவிற்கு சிறிதும் நாகரிகம் தெரியவில்லை. எனது லக்கேஜ் என்ன ஆனது என்பதைக் கூட அவர்கள் கூறவில்லை’ என்று கோபமாகப் பதிவிட்டிருந்தார்.

எந்த விவரங்களையும் அனுப்பி வைக்காமலே ஏர் இந்தியா நிறுவனம் அவரது லக்கேஜ்ஜை மீட்டு எடுத்ததுடன், ‘லக்கேஜ் மும்பை வந்து சேரும். உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களை அனுப்பி வையுங்கள். லக்கேஜ்ஜை அனுப்பி வைக்கிறோம்’ என்று கூறியது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த பதிவையும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon