மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்!

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ஓய்வு பெற்ற  நீதிபதி நியமனம்!

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டார்.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய அமைப்புகளாகத் திகழ்ந்துவரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை இல்லாமல் இருந்து வந்தது.

இதன் காரணமாகத் தமிழ் சினிமா தொடர்ந்து பல பிரச்னைகளையும் சந்தித்து வந்தது. தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கள் தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசின் சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவரப்பட்டது. இந்த தனி அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனி அதிகாரியின் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று(பிப்ரவரி 22) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அரசு நியமித்த சிறப்பு அதிகாரியின் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் தற்போது நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon