மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஆஸ்கர் வெற்றியாளரைக் கேலி செய்த ட்ரம்ப்

ஆஸ்கர் வெற்றியாளரைக் கேலி செய்த ட்ரம்ப்

திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 92-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கொரியா நாட்டைச் சேர்ந்த ‘பாரசைட்’ திரைப்படம் பல விருதுகளை வாங்கிக் குவித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த அயல்மொழித் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. பாரசைட் படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹோ சர்வதேச அளவில் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிலையில்

வரலாற்று சாதனை படைத்த இந்தப்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேலியாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் கொலரோடாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டு பேசினார். அவர் உரையாற்றும் போது, “இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் எவ்வளவு மோசமாக இருந்தன என்பதைப் பார்த்தீர்களா? ஏற்கனவே தென்கொரியாவுடன் வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகள் அமெரிக்காவுக்கு உள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டைச் சேர்ந்த படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வழங்கியுள்ளனர்” என்று கேலி செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.

மேலும், “கொரியாவில் இருந்து ஒரு திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளதே!” என்று கிண்டல் தொனியில் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரம்பின் இந்த உரைக்கு உலக அரங்கில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் பாரசைட் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் டிவிட்டரில் ட்ரம்புக்கு பதிலளித்துள்ளார்.

பாரசைட் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் நியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவரால் சப்-டைட்டிலைப் படிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று கேலியாகப் பதிவிட்டு பதிலளித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon