மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

சமந்தா-ராஷ்மிகா: எல்லை மீறிய ரசிகர்கள்!

சமந்தா-ராஷ்மிகா: எல்லை மீறிய ரசிகர்கள்!

திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் நடிகைகளும் சாதாரண மனிதர்கள் தான் என்பதைப் பல நேரங்களில் ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர்.

அவர்களது கலைத்திறமையையும், நடிப்பாற்றலையும் பாராட்டுவதோடு நின்று விடாமல் பல நேரங்களில் அவர்களைக் கடவுளாகவே சித்தரித்து கோவில் கட்டிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. திரைப்படங்களில் நடிப்பது நடிகர்-நடிகைகளின் வேலையே என்பதையும், அதற்காக அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள் என்பதையும் பல நேரங்களில் பலரும் மறந்துவிடுகின்றனர். ஒரே ஒரு முறை தாங்கள் ஆராதிக்கும் நடிகர்களை நேரில் சந்திக்க முடியாதா? ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கிடைக்காதா? என்றெல்லாம் பலருக்கும் ஏக்கம் இருக்கிறது. இத்தகைய எல்லை கடந்த ஆராதனை ஒரு புறம் என்றால் சில எல்லை மீறல் அனுபவங்களையும் நடிகர்கள் சந்தித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா மற்றும் நடிகை ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட அத்தகைய அனுபவங்கள் அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பத்துவருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகை சமந்தா. திருமணத்தை ஒரு தடையாக நினைக்காமல் தனது திரைப்பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளார். அவரது நடிப்பில் ‘96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ள ஜானு படம் வெளியாகி வெற்றிநடை போடுகிறது. இந்த நிலையில் வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்றுள்ளார்.

அவர் நடந்து சென்ற பாதை முழுவதும் பல ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அதிலும் ரசிகர் ஒருவர் நீண்ட நேரமாக சமந்தாவைப் பின்தொடர்ந்து தொடர்ச்சியாக வீடியோ எடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சமந்தா அவரை நோக்கி, “நடந்தா ஒழுங்கா நட, இந்த வீடியோ எடுக்குற வேலையெல்லாம் வச்சிக்காத” என்று கோபமாக எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அதே போன்று தெலுங்கில் விஜய்தேவரகொண்டா நடித்த கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் திரைப்படங்களின் மூலம் பெரும் ரசிகர்களைச் சம்பாதித்த நடிகை ராஷ்மிகாவிற்கும் கசப்பான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா நடந்துவரும்போது, இளைஞர் ஒருவர் திடீரென ஓடி வந்து ராஷ்மிகாவின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறி அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். திடீரென அங்கிருந்து ஓடிவிட்ட அந்த நபரைப் பிடிக்க பாதுகாவலர்கள் முயன்றும் முடியவில்லை.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த ராஷ்மிகா பின்னர் சகஜ நிலைக்கு வந்துவிட்டார். இது தொடர்பான வீடியோவும் சமூல வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்பதும், அவர்களுக்கும் மனமும் உணர்ச்சிகளும் இருக்கிறது என்பதும் சில ரசிகர்களுக்குப் புரிவது இல்லை. எனவே தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த சம்பவத்தால் ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon