மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிரேன் ஆபரேட்டர் வாக்குமூலம்: கமல்ஹாசனுக்கு சம்மன்?

கிரேன் ஆபரேட்டர் வாக்குமூலம்: கமல்ஹாசனுக்கு சம்மன்?

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் உடைந்து விழுந்து ஏற்பட்ட கோர விபத்துக்குக் காரணமான கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி மைதானத்தில் நடைபெற்று வந்தது. கடந்த புதன்கிழமை(பிப்ரவரி 19) இரவு படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் கிரேன் சரிந்துவிழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரான பரத்குமார் என்ற இணை இயக்குநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், புரொடக்‌ஷன் மேனேஜர் சுந்தரராஜன் மற்றும் லைகா நிறுவனம் ஆகியோரின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு இடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி சென்னை தலைமை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் மத்திய குற்றப்பிரிவில் இந்தியன் 2! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் கிரேன் ஆபரேட்டர் ராஜனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, ‘கிரேனின் அதிக சுமையை ஏற்ற வேண்டாம் என்று நான் கூறியும் ஒளிப்பணியாளர்கள் கேட்கவில்லை’ என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விபத்து நடைபெறும்போது சம்பவ இடத்தில் இருந்த நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட 20 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon