மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

“நானும் புர்கா அணிவேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

“நானும் புர்கா அணிவேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் புர்கா அணிந்தது குறித்த சர்ச்சை விஸ்வரூபமெடுத்தபோது ஆச்சர்யப்படும் வகையில் ரஹ்மான் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். கதிஜாவின் புர்காவை விமர்சித்த எழுத்தாளர் டஸ்லிமா நஸ்ரினுக்கு கதிஜாவே பதிலளித்தார். கதிஜாவின் முடிவு குறித்து பேசியிருக்கும் ரஹ்மான் ‘நான்கூட புர்கா அணிந்துகொள்ளத் தயார்’ என்று கூறியிருக்கிறார்.

“எனக்கு எது பிடித்திருக்கிறதோ அதையே நான் செய்கிறேன். எனது செயல் ஒவ்வொன்றும் எனது சொந்த முடிவிலிருந்து உருவாவதால் அவற்றை நினைத்து பின்னாளில் நான் வருத்தப்படமாட்டேன். நான் என்ன உடை அணியவேண்டும் என நானே முடிவெடுக்கிறேன்” என்று கதிஜா கூறியதை மின்னம்பலத்தில் புர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்! என்ற செய்தியிலும், கதிஜாவுக்கு ஆதரவாக ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தனது முகத்தை மறைத்து ஃபோட்டோ எடுத்து பதிவு செய்ததை புர்கா சர்ச்சை: சகோதரிக்கு ஆதரவாக ரஹ்மான் மகன்! என்ற செய்தியிலும் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், கதிஜா இந்த சர்ச்சையில் ரியாக்ட் செய்த விதம் குறித்து தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மான் கதையெழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக க்விண்ட் மின்னிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முழு பிரச்சினை குறித்த தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

“நாம் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறோமோ, அவற்றின் வழியாகவே பிள்ளைகளையும் அழைத்துவரவேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் நம்முடைய பிரச்சினை எதுவென்று அவர்களுக்குத் தெரியும். நம்முடைய நல்லது மற்றும் கெட்டது ஆகிய இரண்டையுமே அவர்கள் உணரவேண்டும். அதன்பின் அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்தால், எது சரியென்ற முடிவை அவர்கள் எடுப்பார்கள். அதைத்தான் கதிஜா செய்தார். இந்த சர்ச்சைக்கு பதில் சொல்வதற்கு முன்பு நாங்கள் கலந்து பேசிக்கொள்ளவில்லை. கதிஜா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததைப் பார்த்தேன். நானும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தேன். அந்த நேரத்தில் அது தேவையானதாக இருந்தது. காரணம், முக்காடுக்குப் பின்னால் இருப்பவர் கதிஜா. அது அவருடைய முடிவாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். புர்கா அணிவது மத ரீதியிலானது என்பதைவிட மன ரீதியிலானது என நான் நினைக்கிறேன். கதிஜா பாடிய பாடலை பத்து மில்லியன் ரசிகர்கள் ரிங்டோனாக வைத்திருக்கின்றனர். ஒரு ஆண் புர்கா அணியக்கூடாது. இல்லையென்றால் நான் தாராளமாக ஒரு புர்காவை அணிந்துகொள்வேன். அப்படி அணிந்துகொண்டால் கடைக்குச் செல்வதற்கும், வாழ்வின் பல விஷயங்களை உணர்வதற்கும் அது உதவியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் கதிஜாவின் சுதந்திரத்தை அவர் உணர்கிறார் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டில் வேலை செய்பவர்களின் வீட்டு துக்க நிகழ்வுகளுக்கு கதிஜாவால் எளிதாக சென்றுவரமுடிகிறது. சமூகத்துடன் அவர் இணைந்திருப்பதை, கதிஜாவின் சிம்ப்ளிசிட்டியைப் பார்த்து நான் வாயடைத்துப் போயிருக்கிறேன்” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

-சிவா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon