மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

காக்டெய்ல்: கிளியா? மதுவா?

காக்டெய்ல்: கிளியா? மதுவா?

யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள காக்டெய்ல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘உருவக் கேலி செய்பவர்கள் ஓரமாகவே நிற்கட்டும், நான் உயர்ந்து கொள்கிறேன்’ என்ற வார்த்தையை நிஜமாக்கி இன்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் நடிகர் யோகிபாபு. பெரிய நட்சத்திரங்கள் நடித்த திரைப்படமாக இருந்தாலும், ‘நான் யோகிபாபுவுக்காக படம் பார்க்கப் போனேன்’ என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளர்ந்துள்ள யோகிபாபுவின் அடுத்த திரைப்படம் ‘காக்டெய்ல்’.

பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் விவாதத்தை ஆரம்பித்து வைத்தது. அந்த போஸ்டரில் யோகிபாபு, முருக கடவுள் வேடத்தில் இருந்தார். காக்டெய்ல் என்பது ஒருவகை மதுபானத்தின் பெயர் என்பதால், அந்த முருகப்பெருமானை இழிவு படுத்த முயல்வதாகவும், யோகிபாபுவை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு “இது மதுவை மையப்படுத்திய படமும் அல்ல. இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ‘காக்டெய்ல்’ என்னும் டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு வகை கிளியை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கும் வேறு எந்த தவறான காரணமும் இல்லை. அதனால்தான் போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலை பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘காக்டெய்ல்’ என்கிற அந்தக் கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்” என தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

காக்டெய்ல் என்பது, கிளியா? மதுபானமா? என்னும் சந்தேகம் வலுவாக இருந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் ஆரம்பமாகும் போதே, ‘டான்-னுன்னா ஓஸி குடி, டானு வாங்கிட்டு வர்ற சரக்க எடுத்து அடி’ என்பதாக யோகிபாபுவுக்கு இண்ட்ரோ தரப்படுகிறது. முருகர் சிலை ஒன்றை மையமாக வைத்து காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய முருகன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஃபாசில் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை-சாய் பாஸ்கர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon