மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

மரைக்காயர் வரலாற்றைப் பேசும் சூப்பர் கூட்டணி!

மரைக்காயர் வரலாற்றைப் பேசும் சூப்பர் கூட்டணி!

காற்று அலைகளை சீற்றமடையச் செய்கிறதா அல்லது அலைகளால் காற்று சீற்றமடைகிறதா என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அந்த அரபிக்கடலின் கரைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட எல்லையில் கால் பதித்த மனிதக் கூட்டத்துக்குத் தெரியாது, அடுத்த நூற்றாண்டுகளுக்கு அந்த மண்ணை, அந்த நாட்டை, அந்த நாட்டின் மனிதர்களை நாம் தான் காப்பாற்றப்போகிறோம் என்று. கோழிக்கூடு பகுதியில் கால் பதித்து, 1507 முதல் 1600 வரை கேரளாவின் எல்லைகளில் நாவாய்களில் வந்து இறங்கிய போர்ச்சுக்கீசிய படைகளை எதிர்த்துப் போராடிய மரைக்காயர்களின் வரலாற்றினை கூறும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் ‘மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்’.

மோகன்லால், பிரபி, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அஷோக் செல்வன், ஃபாசில், நெடுமுடி வேணு, இன்னசண்ட், சுஹாசினி மணிரத்னம் உட்பட பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மரைக்காயர்களில், போர்ச்சுக்கீசிய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நான்காம் குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடிக்க, அவருடைய நண்பராக பிரபு நடிக்கிறார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு சிறைச்சாலை திரைப்படத்தின் மூலம் இவ்விருவரும் ஒன்றிணைந்திருந்தனர். சிறைச்சாலை திரைப்படமும் ஒரு விதமான வரலாற்றுத் திரைப்படம் தான். அந்தமான் தீவுகளில் உள்ள சிறைச்சாலைகளில் எப்படிப்பட்ட கொடுமைகளும், கொடுங்கோல் நிர்வாகமும் செய்யப்பட்டது என்பதை சிறைச்சாலை திரைப்படம் பேசியது. இப்போது உருவாகியுள்ள மரைக்காயர் திரைப்படம், ஒரு படையெடுப்பை எப்படி குறிப்பிட்ட எல்லையில் இருந்துகொண்டு நூறு வருடங்களுக்கு மரைக்காயர்களால் தடுக்கமுடிந்தது என்பது குறித்து பேசப்போகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், சிறைச்சாலை படத்தை இயக்கிய பிரியதர்ஷன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். இதற்கெல்லாம் மேலும் முத்தாய்ப்பாக சிறைச்சாலை திரைப்படத்தை அப்போது தமிழில் வெளியிட்ட தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு இப்போதும் மரைக்காயர் திரைப்படத்தை தமிழில் வெளியிடுகிறார்.

அதிசிறந்த சண்டை காட்சிகளும், அவற்றை சிறப்பாக நடித்துக்காட்ட முன்னணி நட்சத்திரங்களும் இந்தப்படத்தில் இருப்பதாக மலையாள சினிமா பெருமையாக பேசிக்கொள்கிறது. தொடர்ந்து பல வரலாற்றுத் திரைப்படங்களை எடுத்துவரும் மலையாள சினிமா, தமிழ் சினிமா உருவாக்கி வரும் படங்களின் எல்லைகளை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது.

-சிவா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon