மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

மத்திய குற்றப்பிரிவில் இந்தியன் 2!

மத்திய குற்றப்பிரிவில் இந்தியன் 2!

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் சென்னை தலைமை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 19ஆம் தேதி, பூந்தமல்லி அருகேயுள்ள EVP ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் பரத்குமார் என்ற இணை இயக்குநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிரேன் ஆப்பரேட்டர் ராஜன், புரொடக்‌ஷன் மேனேஜர் சுந்தரராஜன் மற்றும் லைகா நிறுவனம் ஆகியோரின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.  தலைமறைவாக இருந்த கிரேன் ஆப்பரேட்டர் ராஜனை கைது செய்தது காவல் துறை. இந்த விபத்தின் பின்னணியில் இருக்கும் அஜாக்கிரதையிலிருந்து சினிமாவை வெளியே கொண்டுவந்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு தினம் தினம் ஏற்படும் பாதிப்பினை மீட்க, இந்த வழக்கை தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். சினிமாவை சேர்ந்த கலைஞர்கள் பலரும்கூட இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கவேண்டும் எனக் குரல் கொடுத்தனர். இதன் விளைவாக மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு விசாரணையை மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன் சென்னை தலைமை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.

கிரேன் ஆப்பரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்ட பிறகு ஸ்பாட்டில் என்ன நடந்தது என்பதை விசாரித்தபின், இந்த வழக்கை உடனடியாக மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நீதியும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான உதவியும், அடுத்து இந்த வேலையில் மீண்டும் ஈடுபடவிருக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் இந்த விசாரணையின் முடிவு இருந்தால் தான் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல மாற்றம் நிகழும்.

-சிவா

வெள்ளி, 21 பிப் 2020

அடுத்ததுchevronRight icon