மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

காளையாக மாறிய மதயானை!

காளையாக மாறிய மதயானை!

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளைப் பற்றி பதிவு செய்து தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் "தேரும் போரும்".

கதாநாயகனாக அட்டக்கத்தி திரைப்படத்தில் அறிமுகமாகி  குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார்.

தென்மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உட்பட தென்மாவட்ட மக்களின் பலவிதமான வாழ்வியல்களையும் வெளிப்படுத்தும் இந்தத் திரைப்படத்தில், மிக முக்கிய பிரச்சினைகள் சிலவற்றைப் பற்றியும் விக்ரம் பேசியிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  துவங்க இருக்கிறது. "தேரும் போரும்" திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்'ஸ் சார்பாக  நடிகர் அருள்தாஸ் மற்றும் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கும் கார்த்திக்துரை ஆகியோர் தயாரிக்கின்றனர். மைனா, கும்கி, பைரவா, ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர். இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி பாடல்களை எழுதியிருக்கிறார்.

-சிவா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon