மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது!

இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது!

இந்தியன் 2 படப்பிடிப்புக்கு இடையே விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்து ஏற்படக் காரணமாக இருந்த கிரேனின் ஆபரேட்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி மைதானத்தில் நடந்துவந்தது. இந்தநிலையில் நேற்று முன் தினம்(பிப்ரவரி 19) படப்பிடிப்புக்கு இடையே கிரேன் உடைந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அசிஸ்டண்ட் இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் அஸிஸ்டெண்ட் சந்திரன். புரொடக்‌ஷன் அஸிஸ்டெண்ட் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் பெரும் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் திரையுலகினர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து நமது மின்னம்பலம் மொபைல் தினசரியில் இந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த விபத்து தொடர்பாக ‘இந்தியன் 2’ படத்தின் இணை இயக்குநா் பரத்குமாா், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தார். அந்தப் புகாரில், லைக்கா நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை எனவும், அவர்கள் கவனக்குறைவாக இருந்ததாலும், கிரேன் ஆபரேட்டா் ராஜன் அஜாக்கிரதையாக இருந்தாலும் இந்த விபத்து ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா, தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படக்குழுவினர் மட்டுமின்றி அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நிலையில் விபத்துக்குக் காரணமான கிரேனின் ஆபரேட்டர் தலைமறைவாக இருந்தார். அவரைப் போலீசார் தேடி வந்த நிலையில் இன்று(பிப்ரவரி 21) கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜன்வைக் கைது செய்த நசரத்பேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கமல்ஹாசன் சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும், லைக்கா நிறுவனம் சார்பில் இரண்டு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon