மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

பாதுகாப்பு இல்லாத இடத்தில் வேலை செய்யமாட்டோம்: ஆர்.கே.செல்வமணி

பாதுகாப்பு இல்லாத இடத்தில் வேலை செய்யமாட்டோம்: ஆர்.கே.செல்வமணி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது ஆகிய மூன்று பேர் பலியானது திரையுலக வட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரைத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இயக்குநரும் ஃபெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (பிப்ரவரி 21) செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, ”ஆங்கில படங்களுக்கு இணையான தமிழ்ப்படம் தயாரிக்கும் போது, அதற்கு இணையான பாதுகாப்பை வழங்க வேண்டும். முன்பெல்லாம் 20 அடி, 40 அடி உயரத்தில் படம் எடுக்கும் போது அதற்கேற்ற வகையில் கிரேன்களை பயன்படுத்தி வந்தனர். இதெல்லாம் திரைப்படத் துறையிலேயே இருந்தது. இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று டெக்னீசியன்களுக்கு தெரியும்.

ஆனால் தற்போது 60 அடி,100 அடி, 200அடி உயரத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் படம் எடுக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கான உபகரணங்கள் திரைத்துறையில் இல்லை. திரைத்துறையில் இல்லாதபோது அது தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு வரப்படுவதை இயக்குவதற்கான தொழில்நுட்ப அறிவு சினிமாத்துறையில் இருக்கும் கலைஞர்களுக்குத் தெரியாது.

அதுபோன்று, தொழிற்சாலை கிரேன்களை இயக்குபவர்களுக்கு சினிமா துறை பற்றித் தெரியாது. துறையில் உறுப்பினர்கள் அல்லாதவர்களும், உறுப்பினர்களும் சேர்ந்து பணிபுரியும் போது தான் விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையைச் சாராத உபகரணங்கள் வரும் நேரங்களில், அதைப் பயன்படுத்தும் சினிமா துறையில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், அந்த கிரேன் இயக்குபவர்களுக்கும் புரிதல் ஏற்பட்ட பின்னரே படப்பிடிப்பு தொடங்கப்படும். திரைப்படத்துறை சாராத உபகரணங்கள் பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட சம்மேளனத்திடம் ஒப்புதல் பெறும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ”ஏற்கனவே காலா மற்றும் பிகில் படப்பிடிப்புகளின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், ஏவிஎம் விஜயா போன்ற ஸ்டூடியோக்களின் உரிமையாளர்களே தயாரிப்பாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு சினித்துறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துத் தெரியும். அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது அன்பாக இருந்தனர். ஆனால் தற்போது ஸ்டுடியோ வைத்துள்ளவர்களுக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. அவர்களுக்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. குறிப்பாக இவிபி-யை பொறுத்த வரை,எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. இறந்த உடலை ஏற்றுவதற்கான ஆம்புலன்ஸ் வசதி கூட அங்கு இல்லை.

எனவே இனிமேல் ஸ்டூடியோக்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது என ஆராய்ந்து ஒப்பந்தம் செய்த பின்னரே அவர்களுடன் தொழில் செய்வோம். இல்லையெனில் அவர்களுடன் படப்பிடிப்பு நடத்த முடியாது” என்று ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.

ஒருவேளை ஏவிஎம்-ல் இந்த விபத்து நடந்திருந்தால் மருத்துவமனைக்கு, தயாரிப்பாளர் சரவணன் பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் இவர்கள் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எனவே எங்கள் தொழிலாளர்கள் பணிபுரியும் போது அவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்களோ அவர்களுடன் தான் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon