மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

தர்பார் பிரச்சினையில் டி.ஆர்:எல்லாம் மாறுமா?

தர்பார் பிரச்சினையில் டி.ஆர்:எல்லாம் மாறுமா?

தர்பார் திரைப்படத்தின் நஷ்டத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளின் ஒருகட்ட வளர்ச்சியாக அது சினிமா ரசிகர்களுக்கும் நலம் பயக்கும் விதத்தில் மாற்றமடைந்திருக்கிறது. அது, தற்போது சினிமா பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் சேர்க்கப்படும் 8% கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை தான். இந்த கோரிக்கையை தொடங்கியிருப்பது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

தற்போது திரையரங்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி வரி மற்றும் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான LBT வரியாக 8 சதவிகிதம் என மொத்தமாக 20 சதவிகித வரி செலுத்தப்படுகிறது. இதனை முற்றிலும் ரத்து செய்து விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களின் சுமையைக் குறைக்கவேண்டும் என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தர்பார் படத்தின் பிரச்சினையை அந்தப் படத்தில் இணைந்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் அமர்ந்து பேசி சுமுகமான, தார்மீக அடிப்படையிலான தீர்வு எடுக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இனி இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம், MG(மினிமம் கேரண்டி) அடிப்படையில் வாங்கப்படும் படங்களை பிரிவ்யூ ஷோ திரையிடப்பட்டு, அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழு அமைக்கவேண்டும் எனவும், திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விகிதாசாரம் ஆகியவற்றை முறைபடுத்துவதை அந்தக் குழு மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

திரையரங்குகளுக்கு மக்கள் வருவதைக் குறைக்கும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களான அமேசான், நெட்ஃபிலிக்ஸ் போன்றவற்றுக்கு படம் ரிலீஸாகி 8 வாரம் வரைக்கும் திரையிட அனுமதி கொடுக்கக்கூடாது என்ற தீர்மானமும், தொலைக்காட்சிகளில் படம் ரிலீஸாகி குறைந்தபட்சம் 100 நாட்களுக்காவது படத்தை ஒளிபரப்பக்கூடாது என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பல தீர்மானங்களை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க சங்கங்கள் இதற்கு முன்னரும் கொண்டுவந்திருக்கின்றன. ஆனால், இப்போது டி.ராஜேந்தர் தலைமையிலான புதிய அணி விநியோகஸ்தர் சங்கத்துக்கு பொறுப்பேற்றிருப்பதால் அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கவே தமிழ் திரையுலகம் தயாராக இருக்கிறது.

-சிவா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon